கந்தசஷ்டி விழா தொடக்கம்

முருக பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி விழா நேற்று அனைத்து முருகன் கோயில்களிலும் விஷேஷமாக துவங்கியது. அவ்வகையில், முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, 7.30 மணிக்கு யாகசாலை பூஜை, 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை, தொடர்ந்து சண்முகவிலாச மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளுதல், அங்கு சுவாமிக்கு சிறப்பு மகா தீபாராதனை போன்றவை நடைபெற்றன. மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம், கிரி வீதி வலம் முதலிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. நேற்று சூரிய கிரகணத்தையொட்டி மாலை 4 மணிக்கு பட்டு சாத்தி கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் வழக்கம் போல நடைபெற்றன.