பெரியாழ்வார் என்பவர் ஸ்ரீரங்கநாதரின் பக்தர். தோட்டத்திலுள்ள துளசி பாத்தியிலிருந்து அவர் கண்டெடுத்த குழந்தையே ஆண்டாள். அந்தக் குழந்தையை அன்பொழுக வாரி எடுத்து ‘கோதை’ என்று செல்லமாகக் கூப்பிட்டு வளர்த்து வந்தார்.
இளம் வயதிலேயே இறைவனைப் பற்றிப் பேசுவதிலேயே அக்கறை காட்டினாள் கோதை. தினசரி பூமாலையைக் கட்டித் தன் தந்தையிடம் கொடுத்து விடுவாள். ஆனால் அவ்வாறு கொடுப்பதற்கு முன்பு, தான் கட்டிய மாலையைத் தானே அணிந்து அழகு பார்ப்பாள். திருமாலுக்கு ஏற்றவள் ‘நான் தான்’ என்ற அசைக்க முடியாத எண்ணம் அவள் உள்ளத்தில் தோன்றி வளர்ந்தது.
ஒருநாள் பூமாலையில் உரோமம் இருப்பதைக் கண்ட அர்ச்சகர் அதை ஆழ்வாரிடம் காட்டினார். பெரியாழ்வாருக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மறுநாள் கோதை மாலை தொடுக்கும்போது மறைந்திருந்து பார்த்தார். மிக அழகாக மாலையைக் கட்டிய கோதை, அதை தன் கழுத்தில் போட்டுக்கொண்டு அழகு பார்த்தாள். பிறகு அதையே குடலையில் வைப்பதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் கொண்டார். இறைவனுக்கு அபச்சாரம் செய்ததாகக் கூறி கோதையைக் கடிந்து கொண்டார். அன்றிரவு இறைவன் அவன் கனவில் தோன்றி, ‘கோதை இங்கு வளர்வதே எனக்குப் பூமாலை இட்டு, பாமாலை பாடுவதற்குத்தான். அவள் சூடிக்கொடுத்த மாலையே எனக்கு ஏற்புடையது’ என்று கூறி மறைந்தார். அன்று முதல் ஆழ்வார் கோதையை ‘ஆண்டாள்’ என்று அழைத்தார்.
நாட்கள் செல்லச் செல்ல, ஆண்டாள் இறைவனை அடையத் துடித்தாள். அவளது திருமணத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, ‘இந்த உடல் கண்ணனுக்கே உரியது. நரர்களுக்கு என்று பேசப்படின் உயிர் வாழ்கிலேன்” என்றாள்.
மார்கழி மாதத்தில் அவள் நோற்ற நோன்பின் கடுமையும் அவள் உள்ளத்தில் பீறிட்டெழுந்த ஆன்மிக தாபமும் அவள் வாயில் ‘திருப்பாவை’ எனும் பக்திப் பாடல்களாக வெளிவந்தன. மாதத்திற்கு முப்பது நாட்கள் இருப்பது போல முப்பது பாடல்களைக் கொண்டது திருப்பாவை. பக்தியையும், தமிழையும் வளர்த்த கோதை நாச்சியார் போல நாமும் மார்கழி நோன்பிருந்து கண்ணனின் திருவடிகளை வணங்குவோமாக!