கண்ணதாசன், காவிய உலகத்தின் கலங்கரை விளக்கம்

பசுமை நிறைந்த நினைவுகளாய் என்றும் நம் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்கள் வரிசையில் கண்ணதாசனுக்கு என ஓரு இடம் கண்டிப்பாக உண்டு.

தன் ‘வனவாசம்’ புத்தகத்தில் தான் வாழ்வில் செய்த தவறுகளை எல்லாம் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்திய வெள்ளை உள்ளம் கொண்டவர் அவர். காஞ்சி மகாபெரியவரின் அருளாசியால் அவர் எழுதிய ‘அர்த்தமுள்ள ஹிந்துமதம்’ சத்தமின்றி ஒரு ஆத்திகப் புரட்சியை செய்தது என்றால் அது மிகை அல்ல.

ஹிந்து மதத்தின் ஆழத்தை தன் அனுபவங்களோடு எளிமையாக அதில் அவர் எழுதியதை படித்து மனம் திருந்தியவர்கள் பலர்.

ஆரம்பத்தில் திராவிட நாத்திகவாதத்தில் பற்று கொண்ட கண்ணதாசன் அதில் உள்ள துரோகத்தையும், சுயநலத்தையும் கண்டு மனம் வருந்தினார்.

அரசியலிலும் ஈடுபட்டு, பின் அது தனக்கு சரிப்பட்டு வராது என உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார்.

அவர் எழுதிய, நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப் பாடல்கள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், காப்பியங்கள், நவீனங்கள்  என அனைத்தும் அவரை போலவே என்றும் சாகாவரம் பெற்றவை.

தமிழக அரசவை கவிஞர், அரசியல்வாதி, திரையிசை கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், நடிகர், படத்தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் கவிஞர் கண்ணதாசன்.

நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள், நான் கூறியபடி வாழுங்கள்’ என வெளிப்படையாக சொன்னவர். மற்றவர்கள் துன்பத்தை பார்த்து, தன் கையில் இருப்பது அனைத்தையும் கொடுக்கும் வள்ளல் கண்ணதாசனின் புகழ் அவர் பாடிய ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை,

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்பதற்கு ஏற்ப என்றும் நிலைத்திருக்கும்.

கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *