அமெரிக்கா கருத்து சுதந்திரத்தை தடை செய்யாத நாடு. உண்மையை தாராளமாக எடுத்துச் சொல்ல அனுமதிக்கும் தேசம் என்ற பிம்பம் பரவலாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உன்னிப்பாக உற்றுநோக்கினால் இந்த பிம்பம் அபத்தமானது. உண்மைக்குப் புறம்பானது என்பதை துல்லியமாக உணர்ந்து கொள்ளலாம்.
பெரிய நிறுவனங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் அதற்கு கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் இதுதொடர்பாக அரங்கேற்றப்பட்ட மூன்று அசாதாரண மர்ம மரணங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. இதில் இரண்டு மர்ம மரணங்கள் மீது தற்கொலை என்று முத்திரை குத்தப்பட்டது. மற்றொரு மர்ம மரணத்தின் மீது கடுமையான நோய் தொற்று என முத்திரை குத்தப்பட்டது. இந்த மூன்று நிகழ்வுகளைப் பற்றியும் சுருக்கமாக ஆனால் அதே நேரத்தில் முக்கிய அம்சங்கள் எதுவும் விடுபடாத வகையில் பார்ப்போம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி ஜான் பார்நெட் என்ற நடுத்தர வயதானவர் தெற்கு கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் என்ற இடத்தில், ஒரு ஹோட்டலில் வாகன நிறுத்துமிடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் படுகாயம் இருந்தது. இந்த படுகாயத்தை அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டார். அவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்று இந்த விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
அவர் போயிங் நிறுவனத்தில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தொழில்நுட்ப குறைபாடுகள் குறித்து அவர் விமர்சித்துள்ளார். 2017ல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் 2019ல் பிபிசி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். போயிங் 787 டிரீம் லைனர் விமானத்தில் தரக்குறைவான பாகங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தரக்கட்டுப்பாட்டு மேலாளராக முன்பு பணியாற்றிய அவர் கூறியிருந்த இந்த குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தை நியூயார்க் டைம்ஸ் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. அவர் தொடர்பாக ஆவணப்படமும் தயாரித்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் 2024ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மர்மமான முறையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. முறைகேட்டை அம்பலப்படுத்தியதுதான் அவரது உயிரை குடித்து விட்டது என்பதில் உண்மையில்லாமல் இல்லை.
2024ம் ஆண்டு மே மாதம் ஜோஸ்வாடீன் என்ற 45 வயதான நபர் திடீரென கடும் தொற்றால் இறந்து விட்டார் என்று கூறப்பட்டது. அவரும் ஸ்பிரிட் ஏரோ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பாளராக பணியாற்றியவர்தான் விமானத்தின் பின்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேவையற்ற நடவடிக்கைகளை அவர் விமர்சித்தார். இவ்விவகாரம் நியூஸ் வீக் இதழிலும் வெளியானது. நன்கு ஆரோக்கியமாக இருந்த அவர் திடீரென நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார் என்பதை நம்பவே முடியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவைச் சேர்ந்த பாரதிய வம்சாவளியில் வந்த சுசிர் பாலாஜி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து துரிதகதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டார் என ஒரு மணி நேரத்தில் இவ்விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதை யாரும் நம்பத் தயாராக இல்லை. அவரது தாயார் பூர்ணிமா ராவ் தனது தாள முடியாத வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சுசிர் பாலாஜியின் குடும்பத்தினர் 2வது பிரேத பரிசோதனை செய்ய முன்னெடுப்பு மேற்கொண்டனர். இதன்படி சுசிர் பாலாஜி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுசிர் பாலாஜி தற்கொலை செய்வதற்கான எந்த காரணமும் இல்லை. அவர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை.
அவரது அப்பார்ட்மெண்ட்டில் தற்கொலை குறிப்போ அல்லது கடிதமோ கிடைக்கவில்லை. புலனாய்வு செய்தியாளர் ஜார்ஜ் வெப், அப்பார்ட்மெண்டில் ரத்தச் சிதறல் காணப்பட்டது. சம்பவத்துக்கு முன்பு மோதல் நடைபெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியுள்ளார். எல்லாவற்றையும் மொத்தமாக ஒருங்கிணைத்து பார்க்கும் பொழுது ஓபன் ஏஐ காப்புரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது இதை சுசிர் பாலாஜி அம்பலப்படுத்தியுள்ளார். இதுவே அவரது உயிரை பறிக்க காரணமாகி விட்டது என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
டெனால்ட் டிரம்புக்கு நெருக்கமான தொழில் அதிபர் எலன் மஸ்க்கும் இது தற்கொலை போன்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் ஹிந்துத்துவத்துக்கு எதிரானவர்கள் ஓரணியில் திரண்டு இத்தகைய நாசகார நடவடிகைகளை அரங்கேற்றி வருகின்றனர்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி