ஓட்டத்துடன் ஒ[து]ப்புரவு

நீங்கள் அனைவரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை, ஒரே முறை பயன்படுத்தும் நெகிழிட்யிலிருந்து விடுபடும் இயக்கத்தில் பங்கு பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பல இடங்களில் மக்கள் தங்களுக்கே உரிய பிரத்யேக வழிமுறைகளில் இந்த இயக்கத்துக்குத் தங்களாலான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். ஆனால் நமது நாட்டின் இளைஞர் ரிபுதமன் பேல்வி மிகவும் விநோதமான இயக்கத்தை நடத்தியிருக்கிறார்.
இவர் plogging செய்கிறார். முதன்முறையாக நான் plogging என்ற இந்தச் சொல்லைக் கேள்விப்பட்ட போது, எனக்கு இது புதிதாகப் பட்டது. ஒருவேளை அயல்நாடுகளில் இந்தச் சொல் அதிகப் பயன்பாட்டில் இருக்கலாம். ஆனால் பாரதத்தில் ரிபுதமன் தான் இதை அதிகம் பரப்பி வருகிறார்.
இதோ அவரே பேசுகிறார்:
‘‘சார், நானே ஒரு ஓட்டப்பந்தய வீரன். காலையில் ஓடிப் பழகும் போது, போக்குவரத்து நெரிசல் குறைவா இருக்கும், மனிதர்கள் குறைவா இருப்பாங்க, குப்பையும் நெகிழியும் அப்ப ஏராளமா தென்படும். ஐயோ, இப்படி இருக்கேன்னு ஒப்பாரி வைக்காம, இது தொடர்பா ஆக்கபூர்வமா எதையாவது செய்யணுங்கறதுக்காக, நான் எங்க ஓட்டம் தொடர்பான குழுவோட இந்த இயக்கத்தை தில்லியைச் சுற்றியிருக்கற பகுதியில முன்னெடுத்துப் போன பிறகு, நாடு முழுவதுக்கும் இதைக் கொண்டு போனேன்.”
(சரி தான், அப்படியா. நீங்க என்ன செஞ்சீங்க? கொஞ்சம் விளக்குங்க, ஏன்னா இதை ‘மனதின் குரல்’ வாயிலாக, நாட்டுமக்கள் கிட்ட கொண்டு போக முடியும்).
”நாங்க Run and Clean up, அதாவது ஓடுவோம்” சுத்தம் செய்வோம் அப்படீங்கற இயக்கத்தை ஆரம்பிச்சோம். அதாவது ஓடும் பழக்கம் இருக்கற குழுக்கள் அவங்க உடற்பயிற்சி செய்த பிறகு, அவங்களோட ஓய்வு செயல்பாடா என்ன சொன்னோம்னா, நீங்க குப்பைகளை அகற்ற ஆரம்பிங்க, நெகிழிகளை அகற்ற ஆரம்பிங்கன்னோம் அதாவது நீங்க ஓடவும் செய்யறீங்க, குப்பையை அகற்றவும் செய்யறீங்க, திடீர்னு இதில நிறைய உடற்பயிற்சியும் சேர்ந்திடுது. நீங்க வெறுமனே ஓட மட்டும் செய்யலை, உட்கார்றீங்க, குனியறீங்க, தாவறீங்க, எட்டி எடுக்கறீங்க, இப்படி முழுமையான உடற்பயிற்சி செய்ய நேருது. மேலும் கடந்த ஆண்டு நிறைய உடலுறுதி பத்திரிகைகள்ல, இந்தியாவோட தலைசிறந்த ஃபிட்னஸ் போக்கு அப்படீங்கற வகையில இதைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. இந்த ஜாலியான போக்குக்கு இது ஒரு அங்கீகாரம்.
கடந்த இரண்டு ஆண்டுக் காலமா நாங்க கிட்டத்தட்ட 300 plogging முனைப்புக்களை நாடு முழுவதிலயும் மேற்கொண்டிருக்கோம். நாங்க கொச்சியிலிருந்து ஆரம்பிச்ச போது, ஓடும் பயிற்சி மேற்கொள்ளும் குழுக்கள் இணைஞ்சாங்க, அங்க உள்ளூர்ல சுத்தப்படுத்தல்கள் நடக்கும், அப்படிப்பட்ட குழுக்களையும் எங்க கூட சேர்த்துக்கிட்டோம். கொச்சிக்குப் பிறகு மதுரை, கோவை, சேலம்னு… நாங்க உடுப்பி போனோம், அங்க ஒரு பள்ளியில எங்களை அழைச்சிருந்தாங்க. சின்னச் சின்னக் குழந்தைகள், மூணாங்கிளாஸ்லேர்ந்து, ஆறாம் கிளாஸ் வரைக்குமான பிள்ளைங்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டரை அளிக்க அழைச்சிருந்தாங்க, அரை மணி நேரப் பட்டரை, 3 மணி நேர plogging driveஆ ஆயிருச்சு சார்! ஏன்னா பசங்க ரொம்ப ஆர்வமாயிட்டாங்க. எந்த அளவுக்குன்னா, அவங்க தங்களோட பெற்றோருக்கும், அயலாருக்கும், சக நண்பர்களுக்கும் இந்தச் செய்தியைக் கொண்டு சேர்க்க உற்சாகத்தோட இருந்தாங்க.
(பிரதமர் நரேந்திர மோடியின் ௨௦௧௯ செப்டம்பர் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியிலிருந்து)