ஓசூரிலுள்ள ஸ்ரீ நாராயண தாதா ஆஸ்ரமம். அதற்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் பக்தர்கள் உண்டு. ௧௯௮௯ல் அதன் துறவி ஸ்ரீ வெங்கடேச மாஸ்டர் ஸ்ரீ ராம சிலா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த விரும்பினார். அவருக்கு தொடர்பில் இருந்த கிராமங்களுக்கு ராம சிலா கற்கள் கொடுக்கப்பட்டன.
கிராமங்களில் பூஜிக்கப்பட்ட கற்களை சேகரிக்க நான்கு விதமான ரதங்கள் பாரதத்தில் வலம் வந்தன. ஓசூருக்கு ஜாம்பவன் ரதம் வருகை தந்தது. தமிழகத்திலேயே மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்றால் அது ஓசூரில்தான் என்று சொல்ல வேண்டும். நூற்றுக்கணக்கான டிராக்டரில் பூஜிக்கப்பட்ட கற்களை மக்கள் பயபக்தியோடு கொண்டு வந்து அளித்தனர். அன்று ஓசூர் நகரமே ஸ்தம்பித்து போனது. இவ்வளவு ஆதரவு இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இது சில அரசியல்வாதிகளுக்கு பீதியை உண்டாக்கியது. ஆரம்பத்திலேயே இதை கிள்ளியெறிய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர்.
அதற்கு வாய்ப்பாக உடனடியாக வந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைந்தது. அமைதியாக சென்று கொண்டிருந்த ஊர்வலத்தில் சில விஷமிகள் உள்ளே நுழைந்து அருகில் இருந்த மசூதி மீது பட்டாசுகளைக் கொளுத்தி போட்டு கலாட்டா செய்தனர்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி தயாராக காத்துக் கொண்டிருந்த காவல்துறை அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தியது. கலாட்டாகளுக்கு சம்பந்தமில்லாத செந்தில் குமார்ஜி கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குள் புகுந்த காவல்துறையினர் அதனை துவம்சம் செய்தனர்.
இதனைக் கண்டித்து ஒரு கண்டனக் கூட்டம் நடத்த வேண்டும் என்று சேலம் விபாக் பிரச்சாரக் ஆக இருந்த வீரபாகுஜி முடிவு செய்தார். அப்போது ஓசூரில் சங்கத்தை தவிர பாரதிய ஜனதா கட்சி மட்டுமே இருந்தது. பாஜக பெயரில் கண்டனக் கூட்டத்தை நடத்த வீரபாகுஜி விரும்பினார். மிகவும் கடுமையான முயற்சி எடுத்தார். சுமார் ஒரு மாதம் கழித்து தான் காவல்துறை அனுமதி அளித்தது.
பொதுக் கூட்டத்திற்கு முன், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலாவுதீன், எஸ்.பி. காந்திராஜன் ஆகியோர் அரசியல்வாதிகள், உள்ளூர் முக்கியஸ்தர்களை அழைத்து ஒரு அமைதி கூட்டத்தை கூட்டினர். பாஜக, ஹிந்து இயக்கங்களை அழைக்கவில்லை. கூட்டம் நடைபெற இருக்கிறது என்பதை அறிந்த வீரபாகுஜி அந்தக் கூட்டத்தில் அழைப்பு இல்லாமலேயே கலந்து கொண்டார்.
அமைதிக் கூட்டத்தில் ஆட்சியர் பேசும் போது, ”இந்த ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வெளியூர் நபர்களை அனுமதிக்காதீர்கள். இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் வெளியூர் நபர்கள் உடனே வெளியேற வேண்டும்” என்றார். அதைக் கேட்ட வீரபாகுஜி, “நீங்களும் வெளியூர்காரர்தானே. அப்போது நீங்களும் வெளியேறுங்கள்” என்று காட்டமாக பதில் அளித்தார். அதற்கு ஆட்சியர், “நான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவன். எனக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு” என்றார். உடனடியாக வீரபாகுஜி, “நான் ஆர்.எஸ்.எஸ்ஸால் நியமிக்கப்பட்டவன். ஹிந்துக்களுக்கு பிரச்சினை என்று வந்தால் அதை தட்டிக் கேட்க எனக்கும் எல்லா அதிகாரமும் இருக்கிறது” என்றார். அதன் பிறகு ஆட்சியர் வாய் திறக்கவில்லை.
கூட்டத்தை ஓசூர் மையத்திலுள்ள போஸ் பஜாரில் நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது. அனுமதி கொடுத்துவிட்டு பல தடைகளையும், தொந்தரவுகளையும் கொடுத்தது. அதிக கூட்டம் சேராமல் இருக்க காவல்துறை பல முயற்சிகளை எடுத்தது. கிராமங்களிலிருந்து கூட்டம் வராமல் தடுப்பதற்காக மதியத்திற்கு மேல் நகர பேருந்துகளை நிறுத்தினர். தேவையில்லாமல் சந்தைப் பகுதியில் தடியடி நடத்தி மக்கள் மனதில் ஒரு பீதியை உண்டாக்கினர். தனிப்பட்ட முறையிலும் வீரபாகுஜியை கும்பல் ஒன்று ஆவேச குரல் எழுப்பி மிரட்டிப் பார்த்தது. வீரபாகுஜியின் பதிலுரையைப் பார்த்து ஓடி ஒளிந்தனர்.
எல்லா தடைகளையும் மீறி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். பல கிராமங்களிலிருந்து டிராக்டர் எடுத்துக் கொண்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். திரும்பிய பக்கமெங்கும் மக்கள் கூட்டம்தான்.
கண்டனக் கூட்டத்தில் வீரபாகுஜியுடன், ஆர்.பி.வி.எஸ். மணியன், தளி தொகுதி பாஜக வேட்பாளராக பின்னர் அறிவிக்கப்பட்ட ரங்காரெட்டி ஆகியோர் பேசினார்கள். ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவர்களின் ஆவேசமான பேச்சு மக்களின் மனங்களை கொதிக்க வைத்தது.
மாவட்ட ஆட்சியர் அலாவுதீன், மாவட்ட கண்காணிப்பாளர் காந்திராஜன் கூட்டத்தின் ஓர் ஓரத்தில் நின்று அனைவருடைய பேச்சுக்களையும், மக்களின் ஆவேசத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கோபம் உச்சக்கட்டத்திற்கு சென்றது. இந்த எழுச்சியை முளையிலேயே கிள்ளி எறிய திட்டமிட்டனர். அவர்களது சதித்திட்டத்திற்கு ஏதுவாக அப்போது தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி இருந்தது.
ராம சிலா நிகழ்ச்சிக்கு பிறகு நாடு முழுவதும் ஸ்ரீ ராம ஜோதி யாத்திரை நடைபெற்றது. ஓசூருக்கும் அந்த ரதம் வந்தது. ஓசூரில் அமைதியாக நடைபெற்ற ராம ஜோதி ரதம், தேன்கனிக்கோட்டைக்கு 10.10.1991 அன்று சென்றது. அன்றும் ஆர்.பி.வி.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தார்.
ஒரு குறிப்பிட்ட தெரு வழியாக ஊர்வலம் செல்லக் கூடாது என்று காவல்துறை தடைவிதித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் போதே, காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்தனர். அடுத்த சில நிமிடங்களில் திடீரென துப்பாக்கி சூடும் நடைபெற்றது.
ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஜி மீது கடுமையாக தடியடி தாக்குதல் நடந்தது. அவர் மண்டையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக ஸ்வயம்சேவகர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றதால் உள்ளூரைச் சேர்ந்த நரசிம்மன், பாபு, சங்கர், ராஜா ஆகிய நான்கு அப்பாவி ஹிந்துக்கள் தலை, நெஞ்சு, வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து பலியாகினர். அவர்களுடைய உறவினர்களுக்கு கூட சொல்லாமல் உடல்கள் ஓசூரில் காவல்துறையால் அடக்கம் செய்யப்பட்டது.
ஆர்.பி.வி.எஸ். மணியன்ஜி, அப்போதைய தர்மபுரி ஜில்லா பிரச்சாரக் சுந்தர்ராஜன்ஜி (தற்போது நியூரோ தெரபி மருத்துவர்), ஆறுமுகம்ஜி (தற்போது தக்ஷிண் தமிழ்நாடு பிராந்த பிரச்சாரக்) பள்ளி மாணவர் ஏ.என் அசோக் (தற்போது கிரீடா பாரதி க்ஷேத்ர பொறுப்பாளர்) ரங்கநாத் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட சேலத்திலிருந்து வீரபாகுஜி ஓசூர் வந்தார். அவருடன் காலம் சென்ற ஆடிட்டர் ரமேஷ் ஜி, கே.என்.லெட்சுமணன் ஜி, ஏ.கே. பழனிசாமி ஜி, சிங்கமெத்தை கோபி ஜி, ஈரோடு இளங்காந்தி ஜி ஆகியோரும் வந்தனர். கோவையில் நிகழ்ச்சியை முடித்து ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருந்த வேதாந்தம் ஜி மற்றும் திருமணமாகி 3 மாதங்களே ஆகியிருந்த நிலையில் தலை தீபாவளியை எதிர்கொண்டிருந்த மெய்யப்பன் ஜி ஆகியோரும் வந்தனர். தேன்கனிக்கோட்டையிலிருந்து முரளி வந்திருந்தார். இவர்களுடன் முதல்நாள்தான் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த செந்தில்குமார்ஜி, ஓசூர் கே.எஸ். நரேந்திரன் மற்றும் பலர், ஓசூரில் முகாமிட்டு இருந்த ஆட்சியரை பார்க்க சென்றனர்.
நீண்ட நேரம் காத்திருந்தும் மாவட்ட ஆட்சியர் இவர்களைப் பார்க்க அழைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த வீரபாகுஜி, ‘‘இன்னும் சற்று நேரத்தில் எங்களை பார்க்க அழைக்கவில்லையென்றால், வெளியேறி விடுவோம்’’ என்று ஆவேசமாக கூறினார். சற்று நேரத்தில் சில காவல்துறை அதிகாரிகள் வந்து ‘‘பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக நீங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டீர்கள்” என்று கூறி கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊரிலும், தொழில் ரீதியாகவும் மிகவும் முக்கியமானவர்கள். இந்தக் கலவரத்தில் சம்பந்தம் இல்லாதவர்கள். ஆனால் ஓசூரில் இதைப் போன்ற ஒரு துக்ககரமான சம்பவம் நடந்துவிட்டதே என்ற சோகத்தில் அவர்கள் ஆட்சியரிடம் நீதி கேட்க சென்றனர். அது பொது அமைதிக்கு பங்கம் என்று காவல்துறை பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைத்தது.
அவர்களுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்க காவல்துறை விடவில்லை. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, சுமார் 22 நாட்கள் கழித்து விழுப்புரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் கிடைத்தது. விழுப்புரத்தில் சுமார் 23 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் தளர்த்தப்பட்டது.
இது ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் ஹிந்து எழுச்சி ஏற்பட காரணமாக அமைந்தது. பிறகு நடந்த தளி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதற்கு சூத்திரதாரி
யாக இருந்து செயல்பட்டவர் ஸ்ரீ வீரபாகுஜி.
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ததன் மூலம் அயோத்தி போராட்டத்திற்கு வழிகாட்டிய ஸ்ரீ வீரபாகுஜி, ஓசூரில் ராம கார்யம் மூலமாக ஹிந்து எழுச்சிக்கு வித்திட்டார் என்றால் அது மிகையாகாது..