ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்கள் உள்ளனர் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு பாஜக எம்.பி நவ்நீத் கவுர் தெரிவித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஹைதராபாத் ஷாத் நகரில் சில நாட்களுக்கு முன்னர் பாஜக வேட்பாளரை ஆதரித்து நவ்நீத் கவுர் பிரச்சாரம் செய்தார். அப்போது அசாதுதீன் ஒவைசி மற்றும் அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசியை அவர் கடுமையாக விமர்சித்தார். தனது பேச்சில் அக்பருதீன் ஒவைசி கடந்த 2013-ல் சொன்னதையும் குறிப்பிட்டிருந்தார்.
“நம்மால் என்ன செய்ய முடியும் என்று காட்ட 15 நிமிடங்கள் காவல் துறையை அகற்றுங்கள் என அக்பருதீன் சொன்னார். உங்களுக்கு 15 நிமிடங்கள் தேவைப்படலாம். ஆனால், எங்களுக்கு வெறும் 15 விநாடிகள் மட்டும் போதும் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என நவ்நீத் கவுர் சொல்லி இருந்தார். இதற்கு ஹைதராபாத் மக்களவை தொகுதியின் உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்தார். “பிரதமர் மோடியின் வசம் அதிகாரம் உள்ளது. ஏன் 15 நொடிகள்? ஒரு மணி நேரம் கூட எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது மனிதத்துவத்தை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். அதை செய்து பாருங்கள். பிரதமர் உங்கள் வசம். டெல்லி உங்கள் வசம். ஆர்எஸ்எஸ் உங்கள் வசம். நீங்கள் எங்கு வர வேண்டுமென சொல்லுங்கள். நாங்கள் அங்கு வருகிறோம். இந்தியாவின் பன்முகத்தன்மையை அவர்கள் வெறுக்கிறார்கள்” எனச் சொல்லி இருந்தார்.
அதோடு தனது சகோதரர் அக்பருதீனை தான் கட்டுப்படுத்தி வைத்து உள்ளதாகவும். அவர் ஒரு பீரங்கியை போன்றவர் என்றும் ஒவைசி சொல்லி இருந்தார். இதற்கு தற்போது நவ்நீத் கவுர் பதிலடி கொடுத்துள்ளார். “ஒவைசி தனது சகோதரரை கட்டுப்படுத்தி வைத்துள்ளதாக சொல்கிறார். அதுதான் அவருக்கு நல்லது. ஏனெனில், ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்களும், பிரதமர் மோடியின் சிங்கங்களும் உள்ளனர். நான் விரைவில் ஹைதராபாத் வருகிறேன். நாங்கள் பீரங்கியை வீட்டு வாசலில் தான் வைப்போம்” என நவ்நீத் கவுர் தெரிவித்தார்.