ஒற்றுமை தரும் சக்திதான் வெற்றி தரும்” ஆர்.எஸ்.எஸ்

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் வெளியிட்டுள்ள கருத்துக்கள் முக்கியத்துவம் மிக்கவை.

“உன் மதம் என்ன என்று கேட்டு கொலை செய்யும் செயலை ஒருபோதும்  உண்மையான ஹிந்து செய்ய மாட்டான். அது நமது சுபாவத்திற்கே எதிரானது. காஷ்மீர் பஹல்காமில் நடந்தது மதவெறியால் ஏற்பட்ட அரக்கத்தனமான செயல். தர்மத்திற்கு விரோதமான  அந்த செயலை செய்தவர்கள்  அரக்கர்களே.

“ராவணன் சிறந்த அறிஞன்; சிவ பக்தன். என்னதான் அறிஞனாய் இருந்தாலும் அவன் வேண்டுமென்றே  அதர்மப் பாதையில் சென்றான்.  அப்படிப்பட்டவனும் மனம் மாறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது; ஆனால் அவன் மாறுவதாக இல்லை; எனவே ராமபிரான் அவனை வதம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்.

“வேண்டுமென்றே இன்று துவேஷம் பரப்பி பயங்கரவாத செயலில் இறங்குகிறவர்களை அழித்து தர்மத்தைக் காக்க வேண்டியிருக்கிறது. பயங்கரவாதிகளை ஆதரித்து அவர்கள் செய்யும் கொலைகளை நியாயப்படுத்துகிறவர்கள் தீமைக்குத் துணை போகிறவர்கள்.

“அகிம்சையும், கருணையும் பாரதிய பண்பாட்டின் முத்திரைகள்தான். ஆனால் கூட்டம் கூட்டமாக மக்கள் கொலை செய்யப்படுகிற சூழலில் கையை கட்டிக் கொண்டிருப்பது சரி அல்ல. வன்முறை நமது இயல்பு அல்ல; அதேபோல நாம் செய்வது அறியாமல் திகைத்து நிற்போரும் அல்ல. பலவீனர்கள்  செல்வதற்கு அஹிம்சையைத் தவிர  வேறு  பாதை இல்லை. ஆனால் பலவான் விருப்பப்பட்டு சமாதானத்தை தேர்வு செய்கிறான்.  கண்ணுக்கு புலப்படும் சக்தி தான் இன்று அவனது தேர்வுக்கு  பின்பலமாக இருக்க வேண்டும்.

“எப்போதும் துப்பாக்கி முனையில்தான் பயங்கரவாதம் வந்து நிற்கும் என்பது கிடையாது. மக்கள் தொகையின் தன்மையை  மாற்றிப் போடுவதும் ஒருவகை ஆக்கிரமிப்பு தான். பாரதத்தின் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை, ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் ஆபத்து  கொண்டது அந்த ஆக்கிரமிப்பு. சில குழுக்கள் பாரதத்தின் தன்மையையே மாற்றிப் போட திட்டமிடுகின்றன. சந்தடி இல்லாமல் நடைபெறும் அந்த ஆக்கிரமிப்பை புறக்கணிப்பது தேசத்தின் எதிர்காலத்துக்கே  தீங்காக முடியும். கலாச்சார ரீதியாகவும் மக்கள் தொகை ரீதியாகவும் சமன் செய்தால் தான் பாரதத்தின் எதிர்காலம் பத்திரமாக இருக்கும்.

“பஹல்காம் வன்முறையை அடுத்து தேசமே ஒன்று திரண்டு நின்று எழுச்சி கொண்டது பாராட்டுக்குரியது. மக்கள் அனுபவித்த வலி காரணமாக சாதி, சமயம், வட்டாரம், கட்சி என்ற வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து தேசம் ஒன்றுபட்டது. மிருகத்தனத்தை  ஒரே குரலில் கண்டனம் செய்தோம்;  நமது நிஜமான சக்தி இதுதான். இந்த ஒற்றுமை இன்றைக்கு மட்டும்தான்  என்று ஆகி விடக்கூடாது. பிரிவினைவாத சக்திகள் பிளவுபடுத்துவதற்காக முன்வைக்கும் பரப்புரைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும். உணர்வுபூர்வமான தேசிய ஒருமைப்பாட்டை பாரதியர்களான நாம் வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டும். நாம் ஓரிடத்தில் வசிப்பவர்கள் என்ற  அளவில் நின்று விடாமல், பரஸ்பரம் பரிவு கொள்ளும் இணக்கத்தை வளர்த்துக் கொள்வோம். நமது அரசியல் சாசனம் எதிர்பார்ப்பது இந்த ஆன்மநேய ஒருமைப்பாட்டைத் தான்.

“இந்த நவீனயுக ராவணனை வதம் செய்வதற்கு பதினெட்டுக் கரங்கள் கொண்ட பார்வதியாம் துர்க்கை தேவை. எது சரி என்பதில் தெளிவு, ஒற்றுமை, நமது கட்டுக்கோப்பு ஆகியவற்றில் தான் அந்த துர்க்கையின் சக்தி  உள்ளது. ஒற்றுமையால் விளையும் சக்தி மிக முக்கியம். அந்த சக்தி கைவரப் பெற்ற நிலையில் நம்மை யாரும் ஏறெடுத்துப் பார்க்க இயலாது. அப்படியே பார்க்கத் துணிகிறவர்களுக்கு பார்ப்பதற்கு கண்  இல்லாமல் போய்விடும்.  இது வெற்று மிரட்டல் அல்ல;  நமது மக்களின் கௌரவத்தை கட்டிக்காப்போம் என்பதற்கான நமது வீர சபதம். 1962க்கு  முன்னதாக தேசம் அசட்டையாக இருந்தது போல இன்று நாம் நம்முடைய விழிப்புணர்வை நழுவ விடக் கூடாது. உரிய ஆயத்தம் இல்லாமல் சமாதானம் பற்றி கனவு காண்பது ஆபத்தானது  என்று அந்த யுத்தத்தின் போது தேசம் கற்றுக் கொண்டது. இன்றைக்கு நாம் விழிப்புடன் இருப்போம், தாக்குப் பிடிப்போம், தேவையானால் சீற்றம் கொள்வோம்.”