மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் பேசுகையில், “பாரதத்தில் தேர்தல் நடத்துவது என்பது மிகப் பெரிய பட்ஜெட் விவகாரம். அடிக்கடி தேர்தல் நடத்துவதால் அரசு பணம் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது. ஆட்சியில் ஸ்திரத்தன்மைக்காக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த சட்ட ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் பெருமளவு மக்களின் வரிப்பணம் சேமிக்கப்படும். அரசின் பணம் மிச்சமாவது மட்டுமின்றி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவும் கணிசமாகக் குறையும். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல்களால் மாதிரி நடத்தை விதிகளை நீண்ட காலம் அமல்படுத்தப்பட வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் ஏற்படும் பல பாதகமான விளைவுகளை ஒரே நேர தேர்தல் கட்டுப்படுத்தும்” என கூறினார்.