ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமே

 

உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் பாரதம் தான். ஜனநாயகத்தின் பிரதான அம்சம் தேர்தல். மக்களின் நாடித்துடிப்பை தேர்தல் வாயிலாகவே துல்லியமாக உணர்ந்து கொள்ள முடியும். சமீபகாலமாக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்து முதன்மை பெற்று வருகிறது. இது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது புதுமையானது அல்ல. ஏற்கெனவே முதல் மூன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள், ஐந்தாண்டு இடைவெளியில் நடத்தப்பட்டன. இதே காலகட்டத்தில்தான் மாநில சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. அதாவது மக்களவைத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டுள்ளன. விதிவிலக்காக கேரளாவில் மட்டும் அசாதாரண அரசியல் சூழ்நிலை காரணமாக சட்டமன்றத் தேர்தல் தனியாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1967க்குப் பிறகு நிலைமை மாறி விட்டது. பல சட்டமன்றங்கள் பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே கலைக்கப்படும் நிலை உருவாகி விட்டது. நான்காவது மக்களவையும் 1970ம் ஆண்டே கலைக்கப்பட்டது. 1971ல் தேர்தல் நடத்தப்பட்டது. இப்போதெல்லாம் மக்களவைத் தேர்தல் ஒரு கட்டத்திலும், மாநில சட்டமன்றத் தேர்தல் மறுகட்டத்திலும் அவ்வப்போது இடைத்தேர்தல்கள் வெவ்வேறு கட்டங்களிலும் நடத்தப்படுவதால் எப்போது பார்த்தாலும் தேசம் எலெக்சன் ஜுரத்திலேயே உள்ளது.

தேர்தல் நடைமுறை விதிமுறைகள் காரணமாக நலத்திட்டங்களை நிறைவேற்றுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடிக்கடி இவ்வாறு நேருவதால் அரசியல் கட்சிகளுக்கும் பிரச்சினை, மக்களுக்கும் பிரச்சினை என சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கு தீர்வு என்ன? ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே சரியான தீர்வாக அமையும். இதை கடந்த காலத்தில் பலரும் கூறியுள்ளனர். நிகழ்காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழு, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் சமர்பித்து விட்டது.

சட்டப்பிரிவு 14(2)ன்படி மக்களவையின் பதவி காலம் முடிவடைவதற்கு 6 மாதம் மட்டுமே இருக்கின்ற நிலையில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அடுத்த தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிட முடியும். இதைப்போல சட்டப்பிரிவு
15(2)ன்படி மாநில சட்டசபையின் பதவி காலம் முடிவடைவதற்கு 6 மாதம் மட்டுமே இருக்கின்ற நிலையில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அடுத்த தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிட முடியும்.

ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.ஜீவன்ரெட்டி தலைமையிலான பாரத சட்ட ஆணையம் 1999ல் தேர்தல் சட்ட சீர்திருத்தம் தொடர்பான அறிக்கையில், மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியான முன்னெடுப்பாக இருக்கும் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது. ஒரே தேர்தல் என்பது விதியாக இருக்க வேண்டும். இதில் ஏதாவது பிறழ்வு இருந்தால் அது விலக்காக இருக்க முடியும்.

1999ல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மற்றொரு அம்சமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெர்மன் அரசியல் சாசனத்தில் ஆட்சி மாற்றம் தொடர்பான விதிமுறைகள் எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி வரையறை செய்யப்பட்டுள்ளன. தற்போது பிரதமராக இருப்பவரின் தலைமையிலான அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் தாராளமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால் இதில் ஒரு வலுவான திருப்பம் உள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருபவர் தன் மீது நம்பிக்கை உள்ளது என்ற தீர்மானத்தையும் அவையில் தாக்கல் செய்ய வேண்டும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்படுவதும், நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெறுவதும் ஒரே காலத்தில் நடைபெற்றால்தான் நடவடிக்கை பூர்த்தியாகும். இல்லாவிட்டால் இது செயலற்றுப் போய்விடும். ஜெர்மன் உதாரணத்தை பாரதத்திலும் அமலாக்க முன்னெடுப்பை மேற்கொள்வது விரும்பத்தக்கது என்று பி.பி.ஜீவன்ரெட்டி தலைமையிலான பாரத சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது சாலப்பொருத்தமானதே.

மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா? என்ற கேள்விக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சாதகமான பதிலை அளித்துள்ளார். 24 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், விவிபாட்டுகளும் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான கட்டமைப்பை வலுப்படுத்துவதில் பிரச்சினை எதுவும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நிதி ஆயோக்கும் ஆதரித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தினால், அனாவசிய செலவுகளை தவிர்க்க முடியும் என்று நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களுக்கும் வாக்குப்பதிவில் நாட்டம் குறைந்து விடுகிறது. அடிக்கடி தேர்தலை நடத்துவதால் அரசியல் கட்சிகளின் கவனம் முழுவதும் வாக்குப்பதிவு சார்ந்ததாகவே உள்ளது. வேறு ஆக்கப்பூர்வமான பணியில் அரசியல் கட்சிகளால் கவனத்தை செலுத்த முடியவில்லை.

எவ்வளவுதான் விதிமுறைகளை வகுத்திருந்தாலும் தேர்தலில் கருப்புப் பணத்தின் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இதை முற்றிலுமாக ஒழிப்பது எளிதல்ல எனினும் இதை கட்டுப்படுத்த முடியும். ஒரே காலகட்டத்தில் தேர்தலை நடத்தினால் கருப்புப் பணத்தின் ஆதிக்கத்தை பெருமளவு மட்டுப்படுத்திவிட முடியும்.

தேர்தல் பணிகளில் துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அடிக்கடி தேர்தலை நடத்தினால் பாதுகாப்பு சார்ந்த துணை ராணுவத்தின் பணி பாதிப்புக்கு இலக்காகிறது. இது விரும்பத்தக்கது அல்ல. இதற்கும் ஒரே நாடும் ஒரே தேர்தல் தீர்வாகும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் தேசியக் கட்சிகளை முதன்மைப்படுத்தும், பிராந்தியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிடும் என்ற வாதத்தை சிலர் முன்வைக்கிறார்கள். ஆனால், இதை அப்படியே ஏற்க இயலாது. ஏனெனில் வாக்காளர்கள் தெளிவாக உள்ளனர். மக்களவைக்கு எந்தக் கட்சியின் பிரதிநிதியை அனுப்ப வேண்டும். சட்டசபைக்கு எந்தக் கட்சியின் பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்பதில் வேட்பாளர்களை விட வாக்காளர்களே தெளிவாக இருக்கிறார்கள் என்பதுதான் நிகழ்கால நிலவரம்.

கட்டுரையாளர்: அரசியல் அறிவியல் விரிவுரையாளர், டெல்லி பல்கலைக்கழகம்

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி