யார் கொடுத்த அதிகாரம்? எந்த அடிப்படையில் கொடுத்த அதிகாரம்? அல்லது இதுதான் எதேச்சாதிகாரமா? மாணவிகளின் துப்பட்டாவைப் கழற்றச் செய்து பிடுங்கி வைத்துக் கொண்டதைத் தான் சொல்கிறேன். முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு கண்ணியமாகவே உடையணிந்து வந்திருந்தனர் மாணவியர். ஒரு சிலர் கருப்பு துப்பட்டா அணிந்து வந்ததால் அங்கிருந்த காவலர்கள் மாணவிகளிடம் துப்பட்டாவை கழற்றச் சொல்லி வாங்கி வைத்துக்கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும் திருப்பித் தந்துள்ளனர்.
என்ன காரணம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அக்கிரமச் செயல் இது. சொல்லப் போனால் பெண்மையைக் கொச்சைப் படுத்திய நடவடிக்கை. பொது இடத்தில் காவலர்கள் இவ்வாறு நடந்து கொண்டது மாணவிகளுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தந்திருக்கும்?
நீட் தேர்வின் போது சோதனை செய்ய செருப்பைக் கழற்றச் சொன்னார்கள்; கொலுசு கம்மல், வளையலைக் கழற்றச் சொன்னார்கள் என்று மாணவிகளின் குற்றச்சாட்டை மாய்ந்து மாய்ந்து ஒளிபரப்பி ஒரேயடியாக அலறிய காட்சி ஊடகங்கள் இப்போது மேலாடையை கழற்றச் சொன்ன விவகாரத்தில் வாயே திறக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர் சமுதாயம் கூட பெருமளவில் எதிர்ப்புக் குரல் எழுப்பாததும் ஆச்சரியம்.
ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யார் எங்களைக் கேட்பது என்ற ஆணவப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இது ஒரு விதமான கூத்து என்றால் சமத்துவப் பொங்கல் வைக்கிறேனென்று முதல்வரும் துணை முதல்வரும் புகைப்படம் வெளியிட்டது அதைவிட பெரும் கேலிக் கூத்து.
காலில் செருப்பு, பற்ற வைக்காத அடுப்பு, ஹிந்து மதத்தில் சமத்துவமில்லை என்பது போல் புர்காவுடன் இஸ்லாமியப் பெண், கையில் பைபிளுடன் கிறிஸ்தவ சகோதரி புடைசூழ இவர்கள் காட்சிப் படுத்திய பொங்கல் இன்று கேலிப் பொருளாகிவிட்டது. சமத்துவத்தை நிலைநாட்ட வேறு ஏதாவது முயற்சித்திருக்கலாம்.
இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம் இரண்டிலும் இயற்கை வழிபாடு கிடையாது. உருவ வழிபாடும் கிடையாது. பொங்கல் பண்டிகையின் அடிப்படையே சூரியனை வணங்குவதும் நெற்கதிர் விளையும் பூமியை வணங்குவதும் தானே.
இந்தப் பண்பாட்டு நெறிமுறைகள் மீது நம்பிக்கையில்லாதவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து பொங்கல் கொண்டாட வேண்டிய அவசியமென்ன? பொங்கல் பிசாசுகளின் பண்டிகை என்று ஒரு பாதிரியார் கூறிய வீடியோவைக் கூட பார்த்தோமே!
ஒருவேளை முதல்வர் மெய்யாகவே பொங்கல் வைத்து அதை படையலிட்டுத் தந்திருந்தால் அவர்கள் அதை உண்டிருப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள். பிறகு ஏனிந்த நாடகம்?
இன்றும் சேலம், கிருஷ்ணகிரி பகுதிகளில் ஊர் கூடி பொங்கல் வைக்கிறார்கள். அது தான் உண்மையான சமத்துவப் பொங்கல்.
ஆட்சியாளர்களே, சமத்துவத்தைக் கடைப்பிடிக்க பொங்கல் வைப்பது தான் வழியா என்ன?. வாருங்கள் கோயிலுக்கு… உங்கள் செல்வாக்கு, சிறப்பு வழி, வி.ஐ.பி தரிசனம் எல்லாவற்றையும் உதறிவிட்டு நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும் எங்களுடன் வரிசையில் நின்று சாமி கும்பிடுங்களேன், சமத்துவம் மலரும். F