குடியாத்தம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா
வேலூர் விபாக் பிரச்சாரக்காக இருந்த ஸ்ரீ வீரபாகுஜி, ஹீராலால்ஜி உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்களின் முயற்சியால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ஸ்ரீஅம்பாலால் ஜெயின் சரஸ்வதி வித்யாலயா என்ற பெயரில் ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பள்ளியை தேசிய வித்யா கேந்திரா டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தியது. இதன் செயலாளராகவும், தாளாளராகவும் செயல்பட்ட உள்ளூர் வணிகர் தனது தொழிலை நிறுத்திவிட்டு கல்விப் பணியே முதன்மைப் பணியாக மேற்கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய சேவை செய்தார்.
இதன் விளைவாக பள்ளி பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது. அதன் முதல்வராக செயல்பட்டு பள்ளியின் கல்வித் தரத்தையும், மாணவர்கள் நலனையும் சிறந்த முறையில் கவனித்துக் கொண்டவர் முதல்வர் பத்துஜி என்ற பத்மநாபன். இந்தப் பள்ளியின் வளர்ச்சியின் காரணமாக சேத்துவாண்டை அருகில் ஒரு இடம் வாங்கப்பட்டு தற்போது 1,800 மாணவ, மாணவிகள் பயிலும் மிகப் பிரம்மாண்டமான வித்யாலயமாக வளர்ந்
துள்ளது. மாவட்ட அளவில் பல்வேறு சிறப்புக்
களைப் பெற்ற இப்பள்ளியிலிருந்து பயிற்சி பெற்ற பல்வேறு ஆசிரியர்கள் மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் முன்மாதிரி ஆசிரியர்களாக பணியாற்றுகிறார்கள். இதற்கு பின்புலமாக அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் பள்ளி முதல்வர் துரை.பத்மநாபன் ஆவார்.
இந்தக் குழுவின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நிர்வாகம் மூலமாக குடியாத்தம் நகரில் 1,200 மாணவ, மாணவி
களுடன் மற்றொரு பள்ளியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திறமையான ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பால் மாவட்டத்திற்கே இப்பள்ளி வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.
ஆம்பூர் – விவேகானந்த வித்யாலயா
ஆர்.எஸ்.எஸ்ஸின் ஜன ஜாக்ரண் நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஆம்பூர் மா.தீனதயாளன், வேலூர் கே.ராஜேந்திரன், ஆம்பூர் தாசரதி ஆகியோர் பத்துஜியின் தொடர்புக்கு வந்தனர். அவர்களுடைய மனதில் தேசியம் காக்கும் கல்வி நிறுவனம் தொடங்கும் எண்ணத்தைப் பத்துஜி விதைத்தார். ஹிந்து சமயக் கல்வி நிறுவனமாகத் தொடங்க எண்ணி 19.10.1980 அன்று ஆம்பூர் விவேகானந்த வித்யாலயா உதயமானது.
இன்று பல்வேறு கல்வியாளர்களின் முயற்சியால் மேல்நிலைப் பள்ளியாக மிளிர்கிறது. மேலும் சி.பி.எஸ்.சி (CBSE) பள்ளியாக இரு இடங்களில் கல்விப் பணியில் ஆம்பூர் – கஸ்பாவிலும், ஆம்பூரை அடுத்த தேவலாபுரத்திலும் ஹிந்து சமுதாயத்தின் நலன் விழைவோருக்குச் சிறந்த பள்ளியாக வீறு நடைபோட்டு வருகின்றது.
இப்பள்ளிகளை ஹிந்து பாரதியக் கல்வி அறக்கட்டளை நிர்வகித்து வருகின்றது. பள்ளித் தாளாளராக மா.தீனதயாளன்ஜி முழுநேர ஊழியரைப்போல் செயலாற்றி வருகிறார்.
மாதனூர் – ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா
தெய்வசிகாமணி, கணபதி கவுண்டர், தினகரன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் முயற்சியால் மாதனூரில் 01.06.1987-ல் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா தொடங்கப்பட்டது.
தெய்வசிகாமணி அவர்களின் கடின உழைப்பினால் இன்று மேல்நிலைப் பள்ளியாக பாலூர் என்ற இடத்தில் செயல்பட்டு வருகின்றது. மேலும், மாதனூர், குருவராஜபாளையம் ஆகிய இடங்களில் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளிகளுக்கு பத்துஜி அவர்கள் அவ்வப்பொழுது சென்று ஆலோசனை வழங்கி வருகின்றார். பள்ளிகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.
பேரணாம்பட்டு – பாரதி வித்யாலயா
பேரணாம்பட்டு ஜகந்நாதன், சந்துரு, ஏகாம்பரம், ஜானப்பன், தர்மன், மார்கேசன் ஆகியோருடைய கூட்டு முயற்சியால் 31-.05.2004 அன்று முருகன் கோயில் வீதியில் பாரதி வித்யாலயா தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுவர உறுதுணையாக பத்துஜி இருந்து வருகின்றார். நர்சரி, பிரைமரி அளவில் நடைபெற்று வரும் அப்பள்ளியில் பல பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றைச் சமாளிக்க நிர்வாகத்தினருக்கு வழிகாட்டி வருகிறார். பொறியாளர் ஜகந்நாதன் அவர்களின் நிதிப் பங்களிப்பால் பள்ளி தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
பள்ளிகொண்டான் –
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா
பள்ளிகொண்டான் மீனாட்சி நடராஜன் ஒரு நர்சரிப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவர் குடியாத்தம் கே.எம்.ஈ. கருணாகரன்ஜி அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவார். அவர் பத்துஜி அவர்களை அணுகி பள்ளி துவங்குவதற்கான ஆலோசனை கேட்டார். பத்துஜி அதற்கு உதவினார். 01-.06.1987 அன்று பள்ளியும் தொடங்கப்பட்டது. தற்போது வெட்டுவாணம் கிராமத்திலும் 01-.06.-1997 அன்று ஒரு கிளை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மீனாட்சி அம்மையார், நடராஜன் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு அவரது புதல்வர்கள் இருவரும் பள்ளிகளை நிர்வகித்து வருகின்றனர்.
வேலூர், சத்துவாச்சாரி -ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா
மாவட்டத்தின் தலைநகர் வேலூரில் தேசிய சிந்தனை சார்ந்த பள்ளி ஒன்றைத் தொடங்க ஜனார்த்தனம், ஐ.ஓ.பி விஸ்வநாதன், சமூக ஆர்வலர் சிவசங்கரன், கே.ராஜேந்திரன் ஆர்.எஸ்.எஸ் மாவட்டத் தலைவர் ஏழை.அ.முனிசாமி ஆகியோர் இணைந்து பாரதீய கல்வி அறக்கட்டளை என்னும் அறக்கட்டளை அமைத்தனர். குடியாத்தம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயத்தை முன் மாதிரியாகக் கொண்டு நடத்த எண்ணம் கொண்டிருந்தனர். ஐ.ஓ.பி. விஸ்வநாதன் அவர்கள் ஸ்டார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அறக்கட்டளையுடன் இணைத்து விட்டார்.
சிவசங்கரன் தன்பங்காக சத்துவாச்சாரியில் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயத்தைத் தொடங்கினார். அன்னை ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை அதனால் உருவாக்கப்பட்டது. வேலூர் அலமேலு மங்காபுரத்தில் நல்ல கட்டட வசதியுடன் கூடிய கிளையும் தொடங்கப்பட்டது.
ஆர்க்காடு – சரஸ்வதி வித்யா மந்திர்
ஆர்க்காட்டில், சங்க ஊழியர்களின் குழு உள்ளது. அவர்களில் பி.தணிகாசலம், புருஷோத்தமன், ரேக்சந்த், நாகராஜன் இன்னும் சிலர் சேர்ந்து ‘விவேகானந்தா வித்யாலயா’ என்ற பள்ளியைத் தொடங்கினர். பின்னாளில் குழு இரண்டாகப் பிரிந்து சரஸ்வதி வித்யா மந்திர் என்ற மற்றொரு பள்ளி மலர்ந்தது. சுவாமி நாராயணயோகி அவர்களின் ஆசியும், உதவியும் ஒத்துழைப்பும் அவர்களுக்குக் கிட்டியது. சங்கத்திற்குச் சொந்தமான இடம் பள்ளிக்கு வழங்கப்பட்டது. பக்கத்து வீடும் பள்ளிக்காக வாங்கப்பட்டு விரிவு படுத்தப்பட்டது. ஆனாலும் ஆரம்பப் பள்ளி அளவிலேயே உள்ளது. பள்ளி முதல்வர் நாகராஜனின் கடின உழைப்பு பாராட்டுதலுக்குரியது. பத்துஜி அவர்கள் அப்பள்ளிக்குக் கல்வி ஆலோசனைகள் வழங்கி விழாக்களுக்கும் சென்று வருவார்.
இராணிப்பேட்டை – ஹிந்து வித்யாலயா
இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் பணியாற்றிய உதயகுமார் அவர்தம் மனைவி பூங்கொடி இருவரும் சமுதாய அக்கறை கொண்டவர்கள். அவர்களுடைய ஒருமித்த சிந்தனையின் மூலம் தோன்றி வளர்ந்து கொண்டிருப்பது தான் ஹிந்து வித்யாலயா (சிபிஎஸ்சி). பல போராட்டங்களுக்கு இடையே பள்ளியை, நடத்தி வந்த போது ஏற்பட்ட சிக்கல்களுக்கெல்லாம் பத்துஜி அவர்களிடம் ஆலோசனை கேட்டுத் தீர்வு காண்பர்.
காவேரிப்பாக்கம் – ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா
காவேரிப்பாக்கத்தில் ஆனந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலில் பள்ளி நடந்து வந்தது. அந்தக் காலகட்டத்தில் கன்னியாகுமரி மண்டைக் காட்டில் ஹிந்து – கிறித்துவக் கலவரம் ஏற்பட்டது. அதன் விளைவு காவேரிப்பாக்கத்தி
லும் எதிரொலித்தது. அந்த வேகத்தில் பள்ளி நிர்வாகிகள் தமது பள்ளியைத் தூய ஹிந்துப் பள்ளியாக மாற்றி விட்டனர். அதற்குச் சரஸ்வதி வித்யாலயா என்று பெயரிட்டனர்.
இதுதொடர்பாக பத்துஜியை பள்ளி நிர்வாகிகள் பிச்சாண்டி, பன்னீர், சந்திர
சேகரன், கோபால் ஆகியோர் தங்களைச் சட்ட பூர்வமாக ஆனந்த மார்க்கத்தினரிடமிருந்து மீட்க வழிமுறைகளைக் கோரினர். பத்துஜி அதற்கு உதவினார். பின்பு ஏற்பட்ட சில பிரச்சினைகளால் பள்ளியின் முதுகெலும்பாக விளங்கிய பிச்சாண்டி அவர்கள் அந்த நிர்வாகத்திலிருந்து விலகி, 05.06.1991 அன்று விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இன்று சரஸ்வதி வித்யாலயாவும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகின்றது. நல்லக்கண்ணு, பாரஸ்மல் ஜெயின் ஆகியோர் பள்ளியோடு இணைந்து நல்ல முறையில் நிர்வகித்து வருகின்றனர். சொந்தக் கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வருகின்றது.
வந்தவாசி – பாரத மாதா மெட்ரிக் பள்ளி
தேசியக் கல்விக் கழகத்தின் மாநில அமைப்பாளர் சுப்பராவ்ஜியின் அழைப்பின் பேரில் வந்தவாசி தேசியக் கல்வி ஆர்வலர்கள் கூட்டத்தில் பத்துஜி கலந்து கொண்டார். அக்கூட்டத்தின் தீர்மானப்படி 04.10.1984 ‘பாரத மாதா கல்வி கூடம்’ என்ற தமிழ் வழிப் பள்ளி தொடங்கப்பட்டது. ஸ்ரீ குருஜி பெயரில் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. பின்பு ஆங்கில வழிப் பள்ளிக்கூடமாக நகர சங்கசாலக் செல்வராஜ் தனிநபர் பள்ளியாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரை வளர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
பனப்பாக்கம் – சரஸ்வதி வித்யாலயா
பனப்பாக்கத்தைச் சேர்ந்த சிலர் தமது ஊரில் பள்ளி தொடங்கும் ஆர்வத்துடன் ஆலோசனைகள் பெற பத்துஜி அவர்களைச் சந்தித்தனர். பத்துஜி அவர்கள் ஐயங்களைப் போக்கி காவேரிப்பாக்கம் பள்ளியைத் தொடர்பு கொள்ளச் செய்து பள்ளியை ஆரம்பிக்கச் செய்தார். அக்குழுவினரின் சிறப்பான செயல்
பாடுகளினால் மேல்நிலைப் பள்ளியாக விளங்குகிறது.
தெள்ளாறு – ஸ்ரீ சங்கர வித்யாலயா
தேசியக் கல்விப் பணியில் ஆர்வமுடைய தெள்ளாறு ராம
கிருஷ்ண ரெட்டியார் அவர்களின் குடும்பத்தினர் ஸ்ரீ சங்கர வித்யால
யத்தைத் தொடங்கினர். சுப்பராவ்ஜி ஆலோசனையின் பேரில் பத்துஜி அவர்கள் அடிக்கடி அங்கு சென்று வழி காட்டுவார். பத்துஜி தாம் பணியாற்றிய பள்ளியில் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயாவும், வித்யா
பாரதி பள்ளிகளின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றினார்.
தேசியக் கல்விப் பணியே தன் வாழ்வின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இன்றும் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளிகள், சுயநலமின்றி தேசமே தான் வணங்கும் தெய்வம், தேசியக் கல்வியே அதன் வழிபாட்டு முறை என ஒரு புதிய தேசிய சமுதாயத்தை உருவாக்கும் பணியில் முன்மாதிரி கல்வி கூடங்களாகத் திகழ்கிறது.
நாடு எனக்கு என்ன செய்தது? என்று கேள்விகள் கேட்காமல் நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று தன்னைத் தானே வினவி, நாட்டிற்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்கின்ற மாணவர்களை உருவாக்கும் வகையில் இந்தப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
பத்துஜியின் பணிமலர் புத்தகத்திலிருந்து
–தொடரும்.