ஐரோப்பிய நாடான ஸ்லொவாகியா தலைநகர் பிரஸ்லாவாவில் நடந்த குளோப்செக் மாநாட்டில் பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் உக்ரைன் ரஷியா இடையேயான போர், ரஷியாவிடமிருந்து பாரதம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அவற்றுக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், ‘உக்ரைன் ரஷியா விவகாரத்தில் பாரதம் எவ்வித நிலைப்பாட்டை எடுக்காமல் வேலி மேல் அமர்ந்திருக்கவில்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்’ என்றார். உலக சக்தி சக்கரத்தில் பாரதம் எந்த பக்கத்தில் சாயும் அமெரிக்காவிடமா? சீனாவிடமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், ‘இது போன்ற கட்டமைப்பை பாரதம் மீது திணிக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள். பாரதம் எந்த பக்கத்திலும் சாயும் தேவையில்லை. பாரதம் அதன் நலன் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்ப சொந்தமாக முடிவெடுத்துக்கொள்ளும். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்சினைகள் உலகின் பிரச்சினைகளாக பார்க்கின்றன. அதேசமயம், உலகின் பிரச்சினைகள் தங்கள் பிரச்சினைகள் அல்ல என்று கருதுகின்றன. இந்த மனநிலையில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வெளியே வர வேண்டும். ஆம், நாங்கள் சீனாவுடன் கடினமான உறவை கொண்டுள்ளோம். அதை சரிவர கையாள எங்களுக்கு திறமை உள்ளது. உக்ரைன் ரஷியா இடையேயான போருக்கு முன்பு இருந்தே எங்களுக்கும் சீனாவுக்கும் பிரச்சினை நிலவி வருகிறது. அதற்கும் தற்போதைய உக்ரைன் ரஷியா போருக்கும் தொடர்பு இல்லை. பாரதம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்யாவுக்கு நிதியளிப்பதாக கூறுகிறீர்கள். நான் வாதிட விரும்பவில்லை. ஆனால், ரஷ்யாவின் எரிவாயு ஐரோப்பவிற்கு வரவில்லையா. எல்லாமே சமமாக இருக்கவேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். உக்ரைன் மோதலில் என்ன நடக்கிறது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். உலகின் மற்ற நாடுகள் அவற்றின் நலன்களை புறக்கணிக்க தயாராக இல்லை. அதேபோல தான் நாங்களும். இந்த உலகம் எதிர்கொள்ளும் அனைத்து கடுமையான சவால்களுக்கும் பாரதத்தில் இருந்தே தீர்வுகள் வருகின்றன’ என பேசி பாரதத்தின் பெருமையையும் தன்னம்பிக்கையையும் உயர்த்திப் பிடித்தார்.