”ஏழை என்ற ஜாதியை ஒழித்து, அனைவரையும் பணக்கார ஜாதியாக்க வேண்டும் என்பதே, எங்களின் இலக்கு,” என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என் மண்; என் மக்கள் யாத்திரை’ ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் நேற்று காலை பவானி கூடுதுறை பிரிவு அருகே தொடங்கியது. அந்தியூர் – மேட்டூர் பிரிவில், திறந்த வாகனத்தில் நின்றபடி அவர் பேசியதாவது:
தென்னிந்தியாவில் புகழ் பெற்ற மூன்று நதிகள் சங்கமிக்கும், புண்ணிய பூமியான பவானி தொகுதியில், 74வது யாத்திரை நடக்கிறது. 1802ல் கோவை கலெக்டராக இருந்த வில்லியம் கேம், கூடுதுறை வேதநாயகியம்மனை தரிசிக்க விரும்பினார்.
அவர், கிறிஸ்துவர் என்பதால் பவானி மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வேதநாயகியம்மன் சன்னிதியில் மூன்று ஓட்டைகளை ஏற்படுத்தி, அம்மனை அவர் தரிசித்து சென்றார்.
அதன்பின் கோவிலுக்கு, தங்க கட்டில் செய்து கொடுத்தார். பவானியில் அன்று வெள்ளைக்காரனே சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை; தி.மு.க., என்ற கொள்ளைக்காரர்களால், சனாதன தர்மத்தை அழிக்க முடியுமா? பவானி என்பது சனாதன தர்மத்தின் ஆணிவேர். ஏழைகள் ஏழையாக இருக்க கூடாது என்பதற்காக, பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். வீடில்லாதோருக்கு வீடு, கழிப்பறை, காஸ் சிலிண்டர், வங்கி கணக்கு, 100 நாள் வேலை திட்டம் என, பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தவணை முறையில் 95,782 சிறு, குறு விவசாயிகள் மத்திய அரசு திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். ஈரோட்டில், 4,863 பேருக்கு மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மகனும், மருமகனும் நன்றாக இருக்க கட்சி நடத்தி கொண்டிருக்கிறார் முதல்வர். புகை பிடித்தால் எப்படி கேடு தருமோ, அப்படி தி.மு.க.,வை நினைத்தாலே கேடு தரும். தேர்தல் அறிக்கையில், ஈரோட்டில் பல்கலை அமைப்பதாகவும், வேளாண் கருவி உற்பத்தி தொழிற்பேட்டை அமைப்பதாகவும், வர்த்தகம் மையம் அமைப்பதாகவும், பொல்லானுக்கு சிலை அமைப்பதாகவும், நெசவாளர் கூட்டுறவு வங்கி அமைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், ஆட்சியை பிடித்த தி.மு.க., அரசு, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதேசமயம் புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமக்காள தொழிலை இழுத்து மூடவும், அதை நம்பியுள்ள, 5,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நிலை உள்ளது.
சனாதன தர்மத்தில் அனைவரும் சமம்; கீழ் ஜாதி, மேல் ஜாதி என்பது மனிதன் உருவாக்கியது; பா.ஜ.,வை பொறுத்தவரை இரண்டே ஜாதிகள்தான் உள்ளன. ஒன்று பணக்கார ஜாதி, மற்றொன்று ஏழை ஜாதி. ஏழை என்ற ஜாதியை ஒழித்து, அனைவரையும் பணக்கார ஜாதியாக்க வேண்டும் என்பதே, எங்களின் இலக்கு.