ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்பட்டு 23 செப்டம்பர் 2022 உடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சில பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார். அப்போது அவர், “ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் சுகாதாரம் மற்றும் சிகிச்சை வசதி அவர்களின் செலவினங்களை கணிசமாகக் குறைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவியைப் பெற்று ஏராளமானோர் பலனடைந்துள்ளனர். இது குறிப்பிடப்பட்ட மருத்துவமனைகளில் தரமான சிகிச்சையைப் பெற அவர்களுக்கு உதவியது” என கூறினார். இத்திட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி எடுத்துரைத்த டாக்டர் மாண்டவியா, “அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் நோக்கத்தை ஆயுஷ்மான் பாரத் வலுப்படுத்தியுள்ளது. ஏழை மக்களும் சுகாதார சேவையை பெறும் இந்த தேசிய பணியில் சேராத சில மாநிலங்களும் இதில் இணைய வேண்டும். ஆயுஷ்மான் கார்டுகளின் இணை முத்திரையுடன் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் அட்டையை வழங்குவோம். இதுவரை 19 கோடிக்கும் அதிகமான அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 3.8 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையைப் பெற்றுள்ளனர்” என தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், குஜராத் மாநில அமைச்சர் ரிஷிகேஷ் படேல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.