எது சிறந்த தீர்வு?

ஒரு குரு தன் மூன்று சீடர்களுடன் யாத்திரை செய்து கொண்டிருந்தார். வழியில் ஒரு பெரிய வயல்வெளி முழுவதும் களைகள் மண்டிக் கிடப்பதைக் கண்டார். தன் சீடர்களிடம் “இந்தக் களைகளை நீக்க சிறந்த வழி என்ன?” என குரு கேட்டார்.

முதலாம் சீடன், “கையால் ஒவ்வொரு களையாக வேரோடு பிடுங்குவது தான் சிறந்த வழி” என்றான். இரண்டாம் சீடன், “ஒவ்வொரு களையாக பிடுங்கினால் நேரமாகும். களையெடுக்கும் உபகரணங்களை பயன்படுத்தினால் விரைவிலேயே பிடுங்கி விடலாம்” என்று சொன்னான். மூன்றாம் சீடன், ”தீயிட்டு அத்தனை களைகளையும் ஒரேயடியாக அழித்து விடலாம். அது விரைவான வழி” என உரைத்தான்.

குரு, “இந்த வயல்வெளியே மனித மனம், களைகள் அவனது தீய எண்ணங்கள் என்று எடுத்துக் கொண்டால் அப்போதும் நீங்கள் சொன்ன வழிகள் பொருத்தமானவையா?” என கேட்டார்.

முதல் சீடன், “ஆம் குருவே, ஒவ்வொரு தீய எண்ணத்தையும் தனித்தனியாக கவனித்து அதன் தீமையை புரிந்து கொண்டு நீக்குவதே சிறப்பான வழி” என சொல்ல, இரண்டாம் சீடனோ “தீய எண்ணக் களைகளை விரைவாக நீக்க தியானம், ஜபம், மந்திரங்கள் போன்ற உபகரணங்கள் சிறப்பானது” என்றான். மூன்றாவது சீடன், “கடவுளிடம் மனதை ஒப்படைத்தால் ஒரேயடியாக தீய எண்ணங்கள் கருகிவிடும்” என பகர்ந்தான்.

இதற்கு பதில் அளித்த குரு “மூன்றுமே நல்ல வழிகள்தான். ஆனால் அவை மிகப் பொருத்தமானது தானா என்பதை சிந்திக்க வேண்டும்” என கூறி பயணத்தை தொடர்ந்தார். சீடர்கள் தத்தம் வழியே சிறந்தது என்று நினைத்தாலும் குருவின் அங்கீகாரம் கிடைக்காததில் ஏமாற்றம் அடைந்தனர்.

சில மாதங்கள் சென்றன. குருவும் சீடர்களும் அதே பாதையில் வரும்போது, களைகள் இருந்த வயல்வெளியில் விவசாயிகள் நெற்பயிர் விளைவித்திருந்தனர். குரு அந்த வயலைக் காட்டி, “இதுதான் என் கேள்விக்குப் சிறந்த பதில்” என்றார். சீடர்களுக்குப் புரியவில்லை.

“நீங்கள் மூவர் சொன்ன வழிகளும் தற்காலிகமானவை. களைகளைப் பிடுங்கினால் அவை மறுபடியும் முளைக்கும். அதை நிரந்தரமாக அழிக்க ஒரே வழி அந்த வயலை வெற்றிடமாக வைத்திராமல் உபயோகமான பயிர்களை விதைப்பது தான். அதே போல, தீய எண்ணங்களை அழிப்பதற்கு நீங்கள் சொன்ன வழிகளும் தற்காலிகமானவையே. அதனை அழித்தாலும் மனம் காலியாக இருக்கும் வரை அவை மனதில் மீண்டும் எழத்தான் செய்யும். அங்கு நல்ல, உபயோகமான எண்ணங்களை விதைப்பது தான் பொருத்தமானது. நல்லெண்ணங்கள் நிரம்பிய மனதில் தீய எண்ணங்கள் மீண்டும் எழாது. ஓரிரண்டு எழுந்தாலும் அவற்றை நீக்குவது எளிது” என்று குரு விளக்கினார்.