உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகு அதற்கு முதன்முதலில் திட உணவை ஊட்டும் நிகழ்ச்சி அன்னபிரசன்னம் என அழைக்கப்படுகிறது. இந்துக்கள் மத்தியில் ஒரு சுப சடங்காக இது நடத்தப்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் கோரக்பூரில் ஓர் அன்னபிரச்சன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது முஸ்லிம் குழந்தைக்கும் அவர் அன்னபிரசன்னம் செய்தார்.
முதல்வரின் கைகளில் தன் குழந்தை இருப்பதைப் பார்த்து அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்தார். குழந்தைக்கு உணவளித்த பிறகு, அதற்கு முதல்வர் பரிசு வழங்கினார். முஸ்லிம் குழந்தைக்கு அவர் அன்னபிரசன்னம் செய்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, அந்த இடத்தில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு ஸ்டால்களை முதல்வர் ஆய்வு செய்தார். பல்வேறு திட்டப் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள், போர்வைகள் மற்றும் இனிப்புகளை அவர் வழங்கினார்.