ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, விஜயராகவலு ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
புதுச்சேரியில் உள்ள காட்டேரிக்குப்பம் பகுதியில் வீராசாமி −- ஜெயலட்சுமி தம்பதியினருக்கு மகனாக, 1924 ஆம் ஆண்டு பிறந்தார், விஜயராகவலு ஜி. அவருக்கு உடன் பிறந்தவர்கள் தம்பையா என்ற அண்ணனும், கண்ணன் என்ற தம்பியும், பேபி சக்குபாய் என்ற தங்கையும் ஆவர்.
தனது 12ம் வயதில், சென்னையில் உள்ள பெரம்பூருக்கு இடம் பெயர்ந்தனர். தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, அன்றைய சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய பி&சி மில்லில் பணிபுரிந்தார்.
தமிழகத்தில் சங்கத்தை ஆரம்பித்த தாதாராவ் பரமார்த் ஜி, வடசென்னையில் அமைந்துள்ள பக்கிங்காம் அண்டு கர்னாடிக் மில், சுருக்கமாக பி&சி மில் என அழைக்கப்படும் பி&சி தொழிற்சாலையின் ஊழியர்களிடையே தேசபக்தியை விதைத்தார். அங்கு தாதாராவ் பரமார்த் ஜி செய்த சங்க சமுதாயப் பணியால், பல ஊழியர்கள் சங்கத்திற்கு அறிமுகம் ஆகினர், பலர் கார்யகர்த்தர்களாக மாறினர், அவர்களுள் குறிப்பிடத்தக்கவர், விஜயராகவலு ஜி.
சங்கப் பயிற்சி முடித்த பின்னர், ஷாகா ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வந்தார். வடசென்னையில் சங்கத்தை வளர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தார். தொழிலாளர்கள் இடையே தேசிய சுதேசி சிந்தனை வளர, சில ஆண்டுகள் பாரதிய மஸ்தூர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, மிக ஈடுபாட்டுடன் தொழிலாளர்களிடையே தேசப்பணியை ஏற்படுத்த பாடுபட்டார். சங்கப் பிரச்சாரக் சிவராம் ஜி, சங்கச்சாலக் ஸ்ரீ ஹரிபகவான் தாஸ் போன்ற சங்கத்தின் மூத்த அதிகாரிகளோடு நெருங்கிப் பழகி, அவர்களின் அன்பைப் பெற்றார்.
தமிழகத்தில் ஜனசங்கம் உருவாகி, சங்க கார்யகர்த்தர்கள் அதில் பொறுப்பேற்று பணிகளை செய்யத் தொடங்கினார்கள். அப்போது சங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை பெரம்பூரில் ஜனசங்கத்தில் பொறுப்பு எடுத்து பணிகளை செய்தார். 1965 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஜனசங்கத்தின் வேட்பாளராக போட்டியிட்டார்.
தொடர்ந்து மாவட்டம், மாநிலம் என பல பொறுப்புகளில் பணியாற்றி வந்த விஜயராகவலு ஜி, ஜன சங்கத்தில் இருந்த பின்னர் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பித்த போது, அதிலும் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாயப் பணியை செய்தார்.
1968 ஆம் ஆண்டில் சென்னை அண்ணா சாலையில் நடந்த ஜனசங்கம் ஊர்வலத்தில், சில சதிகாரர்களால் திடீரென கலவரம் ஏற்பட்டது. அப்போது சம்பந்தமே இல்லாமல் இவர்கள் தண்டிக்கப்பட்டு சிவக்கொழுந்து முதலியார் ஜி, வேணுகோபால் முதலியார் ஜி போன்றவருடன் விஜயராகவலு ஜியும் சிறை சென்றார்.
“ஹிந்தி எதிர்ப்பு மற்றும் திணிப்பு” என்ற பெயரில், திமுகவினர் பல போராட்டங்களை நடத்தினர். அதில் சங்க காரியகர்த்தர்களைத் தாக்கினர். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டார், விஜயராகவலு ஜி. சங்கப் பணிக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டி இருந்ததால், பி & சி மில் பணியை ராஜினாமா செய்துவிட்டு, மாடுகளை வளர்த்து பால் தொழிலில் ஈடுபட்டார். அவரிடம் பால் வாங்குபவர்களை மிரட்டியும், அவருடைய வியாபாரத்துக்கு இடையூறு செய்யும் வகையில், பால் வாங்குபவர்களை பலவந்தமாக மிரட்டி, விஜயராகவலு ஜியின் வியாபாரத்தை நசுக்க தி.மு.க.வினர் பெரிதும் முயற்சி செய்தனர்.
தனது தொழிலைவிட, எடுத்துக் கொண்ட கொள்கையே முக்கியம் என்பதில் உறுதியாக இருந்து, அந்த சவாலை குடும்ப ஆதரவுடன் எதிர்கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த எமர்ஜென்சிக்கு எதிரான அடக்கு முறையால் கைது செய்யப்பட்டு, சிறை சென்றார். பெரம்பூரில் பேருந்து நிலையம் அமைய, ஜனங்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டங்கள் செய்ததன் விளைவாக, பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
சங்கத்தின் இரண்டாவது அகில பாரத தலைவரான குருஜி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த முன்னோடிகளான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாஜி, முன்னாள் பாரத பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி, முன்னாள் துணை பிரதமரான லால் கிருஷ்ண அத்வானி ஜி, முரளி மனோகர் ஜோஷி ஜி, ஜனா கிருஷ்ணமூர்த்தி ஜி போன்ற தலைவர்களுடன் இணைந்து கட்சிப் பணி செய்து உள்ளார். அவர்கள் தமிழகம் வரும்போது, இவரை சந்தித்து உரையாடுவது வழக்கமாக நடைபெறும் என அவரது குடும்பத்தினர் நமக்கு தெரிவித்தனர்.
1991 ஆம் ஆண்டில், கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடைபெற்ற “ஏக்தா” (ஒற்றுமை) யாத்திரையின் போது, தமிழகத்தின் பாஜக மாநிலத் தலைவராக இருந்து சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டார். காஷ்மீர் வரை சென்றார். 1992 ஆம் ஆண்டு நடந்த கரசேவையின் போது, தமிழகத்தில் பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த நேரத்தில் யாரும் அறியாத வகையில், பல ஸ்வயம்சேவகர்களை அயோத்திக்கு அனுப்பி வைத்ததில், பெரும்பங்கு வகித்தார். தனது வாழ்நாள் முழுவதும் நேரம் தவறாமையை கடைப்பிடித்து வந்தார்.
தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, கட்சி வளர பெரிதும் உழைத்தார். ஆரம்பக் காலங்களில் “தியாக பூமி” பத்திரிகை, சம்ஸ்கிருத பாரதி அமைப்பு விஜயராககவலு ஜியின் அலுவலகத்தில் இருந்து செயல்பட்டது.
அவருடைய மனைவி உஷாராணி அம்மாள். அவர்களுக்கு கோபிகிருஷ்ணன், குமார், தீனபந்து என்ற மூன்று மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். அவரது வழியிலேயே அவர்களது மகன்களும் சங்கப் பணியிலும், பின்னர் கட்சிப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
2005 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாள், இவ்வுலகை விட்டு மறைந்த விஜயராகவலு ஜி, சாதாரண தொண்டனாக கட்சியில் சேர்ந்து, அந்த கட்சிக்கு மாநிலத் தலைவராகி, தனது உழைப்பாலும், சிந்தனையாலும், உயர் பொறுப்பிற்கு வந்து, சங்கப் பணியும், கட்சிப் பணியும் சேர்ந்து செய்து, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.