உலக வங்கி பட்டியலில் முன்னேறும் இந்தியா

எளிதாக தொழில் புரிவதற்கான நாடுகள் குறித்த உலக வங்கியின் பட்டியலில், இந்தியா, 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முந்தைய தர வரிசை பட்டியலில் இந்தியா, 77வது இடத்தில் இருந்தது. தற்போது, 14 இடங்கள் முன்னேறி, 63 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

பிரதமர் மோடியின், ‘மேக் இன் இந்தியா’ பிரசாரம், அன்னிய முதலீட்டை ஈர்ப்பது, தனியார் துறையை மேம்படுத்துதல் நாட்டின் ஒட்டுமொத்த போட்டித் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில், இந்தியா அதிகம் கவனம் செலுத்தி வருவது இந்த முன்னேற்றத்துக்கு காரணம் என, உலக வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக, திவால் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவது, இந்த முன்னேற்றத்துக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.

‘எளிதாக தொழில் புரிதல்’ குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கை, 190 நாடுகள் குறித்து ஆய்வு செய்து, வெளியிடப்படுகிறது. உலக வங்கியின் இந்த தரவரிசை பட்டியலில், நியூசிலாந்து தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு உள்ளது. இதையடுத்து சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகள் உள்ளன.கொரியா, ஐந்தாவது இடத்திலும், அமெரிக்கா ஆறாவது இடத்திலும் உள்ளது. ரிசர்வ் வங்கி, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் பல்வேறு தர நிர்ணய நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை குறைத்துள்ள சூழ்நிலையிலும், இந்த தரவரிசை பட்டியலில், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.

 

மற்றொரு சாதனை:

புதிய திவால் சட்டம் மட்டுமின்றி, வேறு சில பிரிவுகளில் கண்டுள்ள முன்னேற்றமும், இந்தியா தரவரிசை பட்டியலில் முன்னுக்கு வர உதவி செய்துள்ளது.குறிப்பாக வணிகங்களை பதிவு செய்வது, கட்டுமான அனுமதி, எல்லைகளை கடந்து வர்த்தகம் ஆகிய பிரிவுகளில், நல்ல முன்னேற்றத்தை இந்தியா கண்டுள்ளதாக, உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.மோடி பிரதமராக பதவி ஏற்கும்போது, இந்தியா, 190 நாடுகளில், 142 இடத்தில் இருந்தது. நான்கு ஆண்டுகளில் அதாவது, 2018ல், 100 வது இடத்துக்கு முன்னேறியது. தற்போது, 63வது இடத்தை எட்டியுள்ளது.

ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை செயல்படுத்திய பின்னர், வணிகத்தை எளிதாக்குவதில் சிறப்பான முன்னேற்றம் கண்ட, உலகளவிலான, 10 நாடுகளில், இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இப்படி இடம்பெறுவது, இது, மூன்றாவது முறையாகும். அந்த வகையில் இதிலும், இந்தியா மற்றொரு சாதனை புரிந்துள்ளது.

 

தீர்மானிக்கும் 10 பிரிவுகள்:

ஒரு தொழிலைத் தொடங்குவது, கட்டுமான அனுமதிகளைக் கையாளுதல், மின்சாரம் பெறுதல், சொத்துக்களை பதிவு செய்தல், கடன் பெறுதல், சிறுபான்மை முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல், வரி செலுத்துதல், எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்தல், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல் மற்றும் திவால் நடவடிக்கை ஆகிய, 10 பிரிவுகள், தரவரிசை பட்டியலில் ஒரு நாட்டின் இடத்தை தீர்மானிக்கின்றன.