உலக மக்கள் தொகை நாள்

ஓவ்வொரு ஆண்டும்  ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலக மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ‘உலக மக்கள் தொகை நாள்’ கொண்டாடப்படுகிறது. 1987ம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.

உலக மக்கள்தொகை வளர்ச்சியானது கிபி 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியது. 1840ல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927ல் 200 கோடியாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் 1960ல் 300 கோடியை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்தது., 1999ம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக மக்கள் தொகை கணக்கீட்டு ஆணையத்தின் அறிக்கை தெரிவித்திருக்கின்றது.

இதே விகிதத்தில் உலக மக்கள் தொகையின் வளர்ச்சி இருக்குமானால் எதிர்காலத்தில் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப் பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் முக்கிய பிரச்சினைகளாக உருவெடுக்கும் என்று இனம் காணப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்று ஒட்டுமொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியும் தலைதூக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மக்கள்தொகைப் பெருக்கத்தினால் எளிய மக்கள் மத்தியில் குடும்ப நலத் திட்டமிடல்கள் பற்றிய கருத்தரங்குகள், பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் சிறப்பான பலனைத் தரும். மேலும் பள்ளிகளில் மக்கள்தொகைக் கல்விக்கு முக்கியமளிப்பதுடன், மக்கள்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் சமூகப் பொருளாதார தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகின்றது.

மேலும் மக்கதொகை கட்டுப்பாட்டை திட்டமிட்ட ரீதியில் எதிர்க்கும் மதவாதிகளின் மனதை மாற்றி அந்த மக்களையும் மக்கள்தொகை அதிகரிப்பதின் விளைவுகளால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய  பிரச்னைகளை உணரச் செய்து அவர்களையும் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை கடைபிடிக்க செய்ய வேண்டும். இது ஒன்றே மக்கள்தொகையை கட்டுக்குள் வைக்க ஒரே வழி.