நியூயார்க்அமெரிக்காவின் ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’ பத்திரிகை வெளியிட்டுள்ள, உலகின் சிறந்த சி.இ.ஓ.,க்கள் எனப்படும், தலைமை செயல் அதிகாரிகளின் ‘டாப் – 10’ பட்டியலில், மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’ என்ற வர்த்தக இதழை வெளியிட்டு வருகிறது. இதில், உலகின் சிறந்த, 100 சி.இ.ஓ.,க்கள் எனப்படும், தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.நிறுவனத்தின் நிதி நிலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக திறன்களும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதன் அடிப்படையில், 2019ம் ஆண்டுக்கான சிறந்த, 100 சி.இ.ஓ.,க்கள் பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனமான, என்விடியாசின் சி.இ.ஓ., ஜென்ஸன் ஹுவாங், முதலிடம் பிடித்துள்ளார்.
அதில், ‘அடோப்’ நிறுவன சி.இ.ஓ., சாந்தனு நாராயன், 6வது இடத்தையும், ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தைச் சேர்ந்த அஜய் பங்கா, 7வது இடத்தையும், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் சத்யா நாதெல்லா, 9வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள் மூவரும், இந்தியாவை சேர்ந்தவர்கள்.மேலும், டி.பி.எஸ். வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான பியுஷ் குப்தா, 89வது இடத்தைப்பிடித்துள்ளார்.
‘ஆப்பிள்’ நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக், 62 இடத்தில் உள்ளார்.இந்த பட்டியலில், 2014 வரை முதலிடம் வகித்து வந்த, ‘அமேஸான்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெப் பெஸாஸ், இந்த ஆண்டு, பட்டியலில் இடம் பெறவில்லை.