உங்கள் செல்லக் குழந்தைக்கு வாசிப்பின் பண்பு வேண்டாமா?

படிப்பு என்றவுடன் பாடப் புத்தகங்கள்தான் மாணவர்களுக்கு நினைவில் வரும். ஆனால் அவற்றைத் தாண்டியும் படிக்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. மற்ற புத்தகங்களை வாசிப்பது என்பது அவர்களுக்கு கூடுதலான பலத்தைத் தரும். உங்களின் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்துங்கள். குழந்தைகளின் மூளை 6 முதல் 10 வயதுக்குள் வேகமான வளர்ச்சி அடையும் பருவம். அந்த வயதில் அவர்கள் பழகும் எந்த ஒரு செயலையும் அவர்களால் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். எனவே வாசிக்கும் பழக்கத்தை அவர்களின் அன்றாடப் பணியில் ஒன்றாக மாற்ற, பெற்றோர்கள் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்கள் பற்றி அடிப்படையான தகவல்கள்.

குழந்தைகள் பொதுவாக விளையாட்டில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு ஒரே நாளில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது. அவர்களின் கவனத்தை சிறிது சிறிதாக வாசிப்பில் கொண்டு வர முயற்சி செய்யவேண்டும்.

முதலில் படங்கள், பாடல்கள், பெரிய எழுத்துக்கள் உடைய புத்தங்களை வாங்கி கொடுத்து, அதில் இருக்கும் அடிப்படையான தகவல்களை, கதைகளை வாசிக்க சொல்லலாம்.

குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் புத்தங்களை கொஞ்சம் வித்தியாசமாக, வண்ணத் துணியில் வடிவமைக்கப்பட்ட புத்தகம், அட்டையில் வடிவமைக்கப்பட்டது, அனிமேஷன் புத்தங்கள் என பல்வேறு வடிவங்களில் வாங்கி கொடுத்து அவர்களை வியப்புக்குள்ளாக்கினாலே அவர்கள் அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களை வீட்டில் வாங்கி வைப்பது அவசியம். குழந்தையின் பிறந்தநாள், அவர்களின் சிறந்த செயலுக்கு பாராட்டு போன்ற சூழலில் அவர்களுக்கு புத்தகங்களையே பரிசாக கொடுங்கள். அந்தப் புத்தகத்தை வாசிக்க சொல்லி அவர்கள் கூறும் தகவலைப் பொறுமையாகக் கேட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் புத்தகங்கள் அல்லது பேப்பர் படிக்கும்போது அந்த புத்தகத்தை பற்றி குழந்தைகளிடம் பேச வேண்டும், அதில் இருக்கும் படங்களைப் பார்க்கச் சொல்ல வேண்டும் அல்லது புத்தகத்தில் உள்ள பாதி கதையையோ, தகவலையோ அவர்களை ஈர்க்கும் விதமாக கூறிய பின்னர் மீதம் இருக்கும் தகவலை நீயே படித்து தெரிந்துகொள் எனக் கூறுங்கள்.

குழந்தைகள் தினமும் அவர்கள் ஒரு கதை மற்றவர்களுக்கு சொல்லும் பழக்கத்தை உருவாக்குங்கள். மேலும் அவர்கள் படித்த புத்தகத்தின் முடிவை மாற்றி எழுதச் சொல்லிப் பாராட்டலாம் அல்லது ஆர்வம் தரும் வகையில் விமர்சிக்கலாம்.

உங்கள் பகுதியில் இருக்கும் நூலகத்தில் அவர்களை உறுப்பினர் ஆக்கி, தினமும் ஒரு மணிநேரமாவது நூலகம் செல்வதை அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள்.

குழந்தைகளுக்கு அகல வடிவிலான புத்தகங்களை வாங்கி கொடுப்பதை தவிர்த்து, அவர்கள் எளிதில் கையாளக்கூடிய வகையில் நீள வடிவிலான புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ‘பெட் டைம்’ கதைகள் சொல்லும்போது கூட கதைப் புத்தகத்தை உங்கள் கையில் வைத்துக்கொண்டு அதில் வரும் படங்களை அவர்கள் பார்க்கும்படி செய்யலாம்.இதனால் வாசிப்புத் தன்மை அதிகரிப்பதுடன் அவர்களின் கற்பனைத்திறனும் வளரும்.

சிடியுடன் கூடிய கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, முதலில் புத்தகத்தை படிக்கச் சொல்லுங்கள். பின் சிடியைப் பார்க்க சொல்லுங்கள். இதனால் அவர்களுக்கு புரிதல் தன்மையும் அதிகரிக்கும்.

படித்துக்கொண்டே  இருப்போம்

ஒரு பெரியவர், கல்லூரி மாணவர்கள் கூட்டத்தில் ஒரு கேள்வி கேட்டார்: ‘உங்களது கல்லூரி நூல்நிலையம் போய் பள்ளிப் பாடத்துடன் தொடர்பில்லாத புத்தகங்கள் ஏதாவது வாங்கிப் படித்திருக்கிறீர்களா?’ மிகமிகச் சிறுபான்மையான ஒரு கோஷ்டி, புத்தகம் படிப்பதாகப் பதிலளித்தது. என்ன புத்தகம் என்று கேட்டபோது, கற்பனைக் கதைகளையும் நாவல்களையும் படிப்பதாகக் கூறினார்கள்.

எத்தனையோ கல்லூரி மாணவர்களிடம் பேசிப் பார்த்தபோது மூளைக்கு எந்தவிதமான வேலையும் கொடுக்காத பத்திரிகைகளையும், புத்தகங்களையும் படிப்பதாகத் தெரிவித்தார்கள்.

அசட்டுத்தனமான கதைகள் அடங்கிய பத்திரிகைகள் மாணவர்களின் பொழுதுபோக்காக இன்று உள்ளன.

ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள தினசரிப் பத்திரிகைகளின் தலையங்கங்களைப் படிப்பவர்கள் மிகச்சிலரே; பலர் வளர்த்துக்கொண்டுள்ள சொற்களஞ்சியம் மிகவும் சொற்பமாகவே உள்ளது.

பேசும்போதும், எழுதும்போதும், வளமான ஆழமான சொற்களைப் பயன்படுத்துவதில்லை. காரணம் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. ஆழமான கருத்துக்களைக் கேட்கக்கூட பல பேர்களுக்கு அச்சம். வெறும் அரட்டைக்கல்லித் தனமான பேச்சு, அரசியல் தூற்றுதல் பேச்சு, நகைச்சுவையை முதன்மையாகக் கொண்ட சொற்பொழிவுகள் ஆகியவற்றைக் கேட்பதில்தான் சாதாரணமாக நாட்டம் உள்ளது.

இதற்குக் காரணம் என்ன? வாழ்க்கையின் ஆழத்தை அவர்களுக்கு எவரும் கற்பிக்கவில்லை. வாழ்க்கை என்பது காலையில் மலர்ந்து, மாலையில் வாடி உதிர்ந்து போகும் மலர்தான் என்று நினைக்கிறார்கள். ஆன்மாவின் நீண்ட நெடும் யாத்திரையில், ஒவ்வொரு பிறவியும் மேலே மேலே செல்வதற்கான ஒரு படி, ஒரு வாய்ப்பு என்பதை உணரவில்லை.

சரி, மீளும் வழி என்ன? விரிந்த ராஜபாட்டை இருக்கிறது. அதுதான் நல்ல ஆழ்ந்த கருத்துள்ள புத்தகங்களைப் படிப்பது. அவற்றில் சிக்கலாக உள்ள விஷயங்களைப்பற்றிப் பெரியவர்களிடம், கற்றவர்களிடம் போய் அணுகி உரையாடுவது.

என்ன புத்தகம் படிக்கலாம்? தமிழில் நல்ல உயர்ந்த புத்தகங்கள் உள்ளன. ராமகிருஷ்ணர், விவேகானந்தர் நூல்கள் நம்மை மனிதனாக்கும். வள்ளலார், பட்டினத்தார், தாயுமானவர் பாடல்கள் நம்மை உயர்த்தும். ஸ்ரீமத் சித்பவானந்த சுவாமிகள், பகவத் கீதைக்குத் தமிழில் விளக்கமான உரை எழுதியுள்ளார்கள். அதைப் படித்தால் இன்னும் பல்வேறு புத்தகங்களைப் படிக்கத் தூண்டும். ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற நூல்களை ஒவ்வொருவரும் கற்க வேண்டும்; அவை வாழ்க்கைக்குப் புதிய பொருளும் நோக்கமும் அளிக்கும்.

நம்மிலே பலர், பல நல்ல புத்தகங்களைப் பார்த்திருப்போம்; படித்திருப்போம். ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது நாம் படித்த நல்ல புத்தகங்களைப்பற்றிப் பேசலாமே!

  • இராம. கோபாலன்