இளைஞர்களுக்கு உத்வேகமாக விளங்கும் விவேகானந்தர்: ஆளுநர்கள், அரசியல் தலைவர்கள் புகழாரம்

இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக விளங்குபவர் விவேகானந்தர் என்று அவரது பிறந்தநாளையொட்டி ஆளுநர்கள், தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். விவேகானந்தரின் பிறந்தநாளான ஜன.12-ம் தேதி, தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விவேகானந்தரின் 161-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டி ராஜ்பவனில் விவேகானந்தரின் சிலைக்கு முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிமலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்:
ஆளுநர் ஆர்.என்.ரவி: இந்திய தேசியவாதத்தின் உச்சபட்ச அடையாளமாகவும், இளைஞர்களுக்கு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய உத்வேகமாகவும் விளங்கும் விவேகானந்தர், உலகநன்மைக்காக பாரதத்தை அதன்இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார். காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள்உண்மையான பெருமிதத்தையும், தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பாரதத் தாயின் மகனுக்கு எனது பணிவான மரியாதைகள்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: ‘காற்று என்னை கரைக்காது, கத்தி என்னை வெட்டாது, தீ என்னை எரிக்காது, நான் சர்வசக்தி வாய்ந்தவன் என்று நினைத்தால் நம் லட்சியத்தை எந்த தடையும் இல்லாமல் அடையலாம்’ என்று கூறிய விவேகானந்தரின் பிறந்தநாளில் நம் வெற்றியின் சக்தியை அடைவோம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஆங்கிலேயர் ஆட்சியில் இருண்டு கிடந்த பாரதத்துக்கு கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்த வீரத் துறவி விவேகானந்தர். ‘உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன’ போன்றவிவேகானந்தரின் சிந்தனைகள் இன்றளவும் நமது இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.
இளைஞர்களின் முன்மாதிரியாக, பக்தி மற்றும் சேவையின் அடையாளமாக விளங்கும் விவேகானந் தரின் பிறந்தநாளில் அவரது புகழைபோற்றி வணங்குகிறேன்.