தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 கிலோ உணவு தானியம் ரேஷனில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இத்துடன் சேர்த்து பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை (பிரதமர் – ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டம்) மத்திய அரசு கடந்த 2020-ல் கரோனா பெருந்தொற்று காலத்தில் செயல்படுத்தியது. இதன்படி ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை கரோனா காலத்துக்கு பிறகும் மத்திய அரசு நீட்டித்து வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அனுராக் தாக்குர் கூறும்போது, ‘‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் வரும் ஜனவரி 1, 2024 முதல், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஏழை குடும்பங்கள் 5 கிலோ உணவு தானியமும் அந்தியோதயா அட்டைதாரர்கள் 35 கிலோ உணவு தானியமும் மாதந்தோறும் இலவசமாகப் பெறுவார்கள். இதன் மூலம் சுமார் 81 கோடி மக்கள் பலன் அடைவார்கள். இத்திட்டத்துக்கு மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.11.80 லட்சம் கோடி செலவிடும்’’ என்று தெரிவித்தார்.