இலங்கை தேயிலைத் தோட்டத்தில் தமிழ்ப் பெண்கள் போர்க் குரல்

dheyilai-thotta-tholilaliஇலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலைக்கு முக்கியப் பங்குண்டு. உலகிலேயே தேயிலை ஏற்றுமதியில் இலங்கைதான் முதலிடத்தில் உள்ளது. உள்நாட்டு நுகர்வுக்கு தேவையான அளவு பயன்படுத்திவிட்டு எஞ்சியதை பல்வேறு நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்கிறது. சோவியத் ஒன்றியத்தில் அங்கம் வகித்து இப்போது தனித்தனி நாடுகளாக பிரிந்துவிட்ட தேசங்கள், அரபு நாடுகள், சிரியா, துருக்கி, ஈரான், ஈராக், இங்கிலாந்து, எகிப்து, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்துவருவதன் மூலம் கணிசமான அந்நிய செலாவணியை இலங்கை ஈட்டி வருகிறது. இலங்கையின் ஏற்றுமதியில் தேயிலையின் பங்கு சுமார் 13 சதவீதம் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழ்ப் பெண்கள்தான் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக உவாவிலும் மத்திய மாகாணத்திலும் தமிழ்ப் பெண்கள் படும் அவதிக்கு அளவே இல்லை. தேயிலை தோட்டங்களில் கணிசமான வருமானம் கிடைத்தாலும்கூட, கூலித் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைவிட கேவலமாகவே நடத்தப்பட்டு வருகிறார்கள். போதுமான அடிப்படை வசதிகள்கூட அவர்களுக்கு செய்துகொடுக்கப்படவில்லை.

இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக இந்திய ரூபாய் மதிப்புப்படி 280 கொடுக்கப்பட்டு வருகிறது. இது இலங்கை பணமதிப்புப்படி 620 ரூபாய் ஆகும். இந்த கூலி தொடர்பான ஒப்பந்தம் 2013ல் கையெழுத்திடப்பட்டது. இது 2015ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. இதன் பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை. தேயிலைத் தோட்ட முதலாளிகள் இழுத்தடித்து வருகிறார்கள். சம்பள உயர்வு கோரி தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தமிழ் பெண்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தேர்தலின்போது தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று வாக்குறுதி அளித்த அரசியல் கட்சித் தலைவர்கள், இப்போது இந்த போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

எங்களுக்கு குறைந்தபட்சம் தினக் கூலியாக ஆயிரம் இலங்கை ரூபாய் தரவேண்டும் என்பது தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை. ஆயிரம் இலங்கை ரூபாய் என்பது இந்திய ரூபாய் 450க்கு சமமான தொகை. பல மாதங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள மூணாறு வட்டார தேயிலைத் தோட்டங்களில் தினக்கூலிகளாகப் பணியாற்றி வரும் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் மலையாளப் பெண்களைவிட தமிழ்ப் பெண்களே அதிகம். பல வாரங்களாக போராட்டம் நீடித்ததையடுத்து தேயிலைத் தோட்ட முதலாளிகள் படிந்தார்கள். தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிவரும் பெண்களுக்கு கூலி உயர்வு அளிக்க முதலாளிகள் ஒப்புக்கொண்டார்கள்.

கேரளாவில் போராட்டம் நடத்திய தமிழ்ப் பெண்களின் நிலையையே இப்போது இலங்கையில் போராட்டம் நடத்திவரும் தமிழ்ப் பெண்களின் நிலை நினைவுபடுத்துகிறது. கேரளத் தமிழ்ப் பெண்களின் போராட்டம் வெற்றிபெற்றதைப் போல இலங்கைத் தமிழ்ப் பெண்களின் போராட்டமும் வெற்றிபெற வேண்டும். ஏனெனில் அவர்கள் கேட்கும் கூலி உயர்வை நிகழ்கால பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது அநியாயமானது என்று நிச்சயமாக கூறமுடியாது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *