இன்று சட்டசபை தேர்தல், 24-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

மராட்டியம், அரியானா மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வருகிற 24-ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தெரிந்துவிடும்.

பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநில சட்டசபைக் கும், பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் அரியானா சட்டசபைக்கும் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மராட்டியத்தில் 8 கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 600 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுப் போடுவதற்காக 96 ஆயிரத்து 661 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் 150 பெண்கள் உள்பட மொத்தம் 1,169 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 1 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக 19 ஆயிரத்து 578 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு போட்டியிடும் வேட்பாளர்களில் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் (கர்னால்), எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா (கர்கி சம்ப்லா கிலோய்), காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா (கைதால்), ஜனநாயக் ஜனதா தலைவர் துஷ்யந்த் சவுதாலா (உச்சனா கலன்), இந்திய தேசிய லோக்தளம் கட்சியைச் சேர்ந்த அபய்சிங் சவுதாலா (எலனாபாத்), மாநில பாரதீய ஜனதா தலைவர் சுபாஷ் பராலா (தோகனா) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.

ஓட்டுப்பதிவையொட்டி, இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். அப்போது, இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தெரிந்துவிடும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இந்த இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்கள் நடைபெறுவதால், இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன. மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் தமிழ்நாடு (2), உத்தரபிரதேசம் (11), குஜராத் (6), கேரளா (5), பீகார் (5), அசாம் (4), பஞ்சாப் (4), சிக்கிம் (3), ராஜஸ்தான் (2), இமாசலபிரதேசம் (2), புதுச்சேரி, தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார் (தலா ஒரு தொகுதி) ஆகிய மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா நாடாளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளும் 24-ந் தேதி எண்ணப்படும்…..

 

இதேபோன்று , தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.  நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் பிரசாரத்திற்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட வெளிநபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.
நாங்குநேரி தொகுதியில் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 170 மையங்களில் 299 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் 2,23,387 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக விக்கிரவாண்டி தொகுதியில் 139 இடங்களில் மொத்தம் 275 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்தல் பணிகளில் 1,930 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவ படையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.  இதனிடையே, நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடந்து வருகிறது.  வாக்கு சாவடிகளில் காலையிலேயே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்