இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தஞ்சாவூர் மாவட்டம், தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் கட்டாய மதமாற்ற கும்பலின் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவின் உயிரிழப்பு, அவரது குடும்பத்தாருடன் சேர்த்து ஹிந்துக்கள் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மரணத்திற்கு முன்பான மாணவியின் வாக்குமூலம் வெளியானது. லாவண்யாவின் மரணத்திற்கு நீதிகேட்டு பெற்றோர்களும், பொதுமக்களும் போராடிக்கொண்டு உள்ளனர். இவ்வேளையில் காவல்துறை அப்பள்ளியின் வார்டன் சகாயமேரியை மட்டும் கைது செய்தது. மாணவியின் மரணத்திற்கு கட்டாய மதமாற்றம் காரணமில்லை என்று அறிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிகள் மீது புகார் வந்தால் மட்டும் கண்டனம் தெரிவிக்கும் தமிழக அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், ஊடகங்களும் இந்த சம்பவத்தில் ஆதாரமிருந்தும் கண்டிக்காமல் இருப்பது நியாயமா? கோவையில் தனியார் பள்ளி மாணவி தற்கொலையின்போது பள்ளியையே இழுத்து மூடச்சொன்ன கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் போராளிகளும் தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் மதமாற்றச் செயலை கண்டிக்காமல் வாய்மூடி மெளனியாக இருப்பது ஏன்? இதில் சம்பந்தப்பட்ட பள்ளியின் கன்னியாஸ்திரிகள் இருவரையும், பள்ளியின் பாதிரியையும் காவல்துறை கைது செய்யவேண்டும். மதமாற்றங்கள் தமிழகத்தின் கிறிஸ்தவப் பள்ளி, கல்லூரிகளில் எங்கெல்லாம் நடந்துள்ளது என்பதை தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரிக்க வேண்டும். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் இந்து முன்னணியின் தொடர் போராட்டங்களில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.