இந்திய முஸ்லிம்களை பிரிப்பதாக கூறும் ப சிதம்பரம் அவர்களே… நினைவிருக்கிறதா ஹஷிம்பூரா…?

சிதம்பரம் அவர்களே, ஹஷிம்புராவில் முஸ்லிம்கள் எப்படி குறிவைக்கப்பட்டார்கள் என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா? அந்த வழக்கில் அப்போதைய உள்துறை இணை அமைச்சரான உங்கள் பங்கினையும் விசாரிக்க வேண்டும் என்று திரு. சுப்பிரமணியசுவாமி அவர்கள் வழக்கு தொடர்ந்ததை மறந்து விட்டீர்களா?

“மே 22, 1987 ம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹஷிம்புராவில் மாகாண ஆயுத படை வீரர்கள் இரு வாகனங்களில் சென்று இறங்கினர். மேலதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் 19 வீரர்கள் கொண்ட அந்த படையினர் அந்த பகுதியை சூழ்ந்து கொண்டு ஹிந்துக்களையும், முஸ்லிம்களையம் பிரிந்து நிற்க சொன்னார்கள்.பிறகு இஸ்லாமிய பெண்களையும், வயதான இஸ்லாமிய ஆண்களையும் பிரித்தனர். தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்களில் 15 வயது முதலே 35 வயது வரையிலான இளைஞர்களை வாகனங்களில் வலுக்கட்டாயமாக ஏற்றினர்.

அதன் பின் அந்த வாகனங்கள் 20 கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு ஆற்றின் அருகே நிறுத்தப்பட்டது. ஒவ்வொருவராக இறங்கிய பின் அவர்களை நெற்றிப்பொட்டிலே சுட்டு ஆற்றிலே வீசி எறிந்தனர் ஆயுத படை காவலர்கள். அதில் இருவர் மட்டும் பிழைத்தனர். 42 இஸ்லாமிய இளைஞர்கள் நெற்றிப்பொட்டிலே சுடப்பட்டு ஆற்றிலே வீசப்பட்டதற்கு யார் காரணம்?

‘ஹாஷிம்புரா இன அழிப்பில் ப.சிதம்பரத்தின் பங்கு 2012’ என்ற தன் பதிவில் திரு.சுப்பிரமணியசுவாமி அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் யூதர்கள் மீதான இனஅழிப்பில் 21 நாஜிக்கள் மீதான வழக்கில் ஐக்கிய நாடுகளின் உச்சநீதி மன்ற வழக்கறிஞர் நீதிபதி.ராபர்ட் ஜேக்ஸன் அவர்கள், யூதர்கள் மற்றும் ஜிப்ஸிக்களின் மீதான நாஜிக்களின் ‘அமைதியான சதியை’ ஜெர்மனி எப்படியெல்லாம் கட்டவிழ்த்து விட்டது என்பதை விரிவாக சுட்டிக்காட்டியதை நினைவில் கொண்டேன். மீண்டும் ஒரு அமைதி சதி திட்டத்தில் என்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டுமா? ஆனால் இது இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலை மட்டுமல்ல, அதை விட ஆழமான காரணம் உள்ளது”

“இந்த சம்பவத்தையடுத்து, சையது சகாபுதீன் எம்.பி அவர்கள் என்னை தொடர்பு கொண்டு பதட்டத்தோடு பேசினார். நான் ஆவண செய்வதாக உறுதியளித்தேன். அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியுடன் பேசினேன். நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். எடுக்கவில்லை. மாதங்கள் பல கடந்தது. நடவடிக்கை ஏதும் இல்லை. இதனிடையில் மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங், உத்திரபிரதேச முதல்வர் வீர் பகதூர் சிங் ஆகியோர் என்னிடம் நடந்த சம்பவம் குறித்து பேசினர். இந்த விவகாரத்தில், ‘ எப்படி காங்கிரஸ் சீக்கியர்களுக்கு பாடத்தை கற்று கொடுத்ததோ, அதே போன்று முஸ்லிம்களுக்கும் பாடம் கற்று கொடுக்க வேண்டும்’ என்ற ஆலோசனையை கொடுத்தது அன்றைய மத்திய உள்துறை இணை அமைச்சராக (உள்நாட்டு பாதுகாப்பு) இருந்த ப.சிதம்பரம் என்றும் அதனால். ராஜிவ் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட மாட்டார்” என்றும் அதே பதிவில் குறிப்பிட்டுள்ளார் திரு. சுப்பிரமணிய ஸ்வாமி.

“மே 18, 1987 அன்று உத்தரபிரதேச முதல்வர் வீர் பகதூர் சிங் மற்றும் ப.சிதம்பரமும் கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஹாஷிம்புரா, மல்லியனா மற்றும் இதர பகுதிகளை பார்வையிட்டதாக மாநிலங்களவையில் நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதே அவையில், தனியறையில் ப.சிதம்பரம் அரசு அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார் என்று நான் குறிப்பிட்ட போது, கொதித்தெழுந்தார்கள். நியாயமாக, அந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மோஸினா கித்வாய் அவர்களை அழைத்திருக்க வேண்டும். ஆனால், அப்போது அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் தான் ’50 இஸ்லாமிய இளைஞர்களை சுட்டு கொள்ளவும்’ என்ற இனஅழிப்புக்கான உத்தரவை பிறப்பித்தார்” . (ஆதாரம் ;சுப்பிரமணிய ஸ்வாமியின், ஹாஷிம்புரா இன அழிப்பில் ப.சிதம்பரத்தின் பங்கு 2012)

“இதை நான் கோடிட்டு காண்பித்த போது, அன்றைய மத்திய அமைச்சரான நாராயண சாமி அவர்கள் என் மீது அவதூறு மற்றும் உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வருவதாக கூறினார். ஆனால், வழக்கம் போல் ஒன்றும் நடக்கவில்லை” என்றும் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சுப்பிரமணிய சுவாமி அவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினார். பாத யாத்திரை நடத்தி விசாரணை ஆணையம் அமைக்க கோரினார். மறுக்கப்பட்டது. உண்ணாவிரதம் இருந்தார். ஏழாவது நாள் அவருக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று ராஜிவ் காந்தி பயந்து போய், பூட்டாசிங் அவர்களின் மூலம் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர ஆணையம் அமைப்பதாக உறுதி கூறினார். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. 2003 ல் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டிற்கு பிறகே இந்த வழக்கு வேகம் பெற்றது.

இந்த வழக்கு சென்ற பாதை ………

1988 ம் வருடம் இந்த வழக்கு சி பி சி ஐ டிக்கு மாற்றப்பட்டது.

1994 ம் வருடம் 60 ஆயுதப்படை அதிகாரிகளை விசாரித்த அறிக்கையை அளித்தது சி பி சி ஐ டி.

மே 20,1996 அன்று 19 காவலர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

செப்டம்பர் 2002 டில்லி நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றியமைத்தது உச்ச நீதிமன்றம்.

ஜூலை 2006 ல் கொலை, கடத்தல்,கொலை முயற்சி, சதி , சாட்சிகளை கலைக்க முற்பட்டது போன்ற பல் வேறு பிரிவுகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மார்ச் 21,2015 – குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மே 18, 2015 அன்று விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

அக்டோபர் 31,2018, 42 பேரை படு கொலை செய்த குற்றத்திற்காக 16 ஆயுதப்படை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரிக்க உத்தரவிடுமாறு சுப்பிரமணிய சுவாமி அவர்கள் நீதிமன்றத்தை கேட்டு கொண்டார். ஆனால் அவருக்கு அதில் தலையிட உரிமை இல்லை எனவும் அதனால் அவரது மனுவை விசாரணை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. உத்திரபிரதேச காவல் துறை தான் இதை கேட்க முடியும் என கூறிவிட்டது.

“இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சிறிய மீன்கள் தான். இப்படிப்பட்ட கொடுஞ்செயலை சாதாரண காவலர்களால் செய்திருக்க முடியாது. சாதாரண துணை ஆய்வாளர் உத்தரவை எந்த காவலரும் நிறைவேற்ற மாட்டார்கள். இதில் தொடர்புடைய பெரிய மனிதர்கள் தப்பித்து விட்டார்கள். விசாரணையின் முதல் கட்டத்தில் இந்த விவகாரத்தில் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கும், ஒரு அரசியல் தலைவருக்கும் இருந்த தொடர்பு குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த சம்பவத்தை வடிவமைத்தவர்கள், திட்டமிட்டவர்கள் தப்பித்து விட்டது வருத்தமளிக்கிறது” என்று அப்போதைய காசியாபாத்தின் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்தவரும், இந்த சம்பவத்தை புத்தகமாக எழுதியவருமான விபூதி நாராயண் ராய் அவர்கள், கூறியுள்ளது உன்னிப்பாக கவனிக்கபட வேண்டியது.

அந்த காலகட்டத்தில் இது போன்று பல இடங்களில் நடந்தாக சொல்லப்படுகிறது. ஹிந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமிடையே மோதல்கள் பல நடந்திருந்தாலும், உத்திரப்பிரதேசத்தில் பல இடங்களில் திட்டமிட்ட ரீதியில் நடந்த பல்வேறு சதிகளை நாம் அறிந்திருக்கவில்லை . ராமஜென்ம பூமியில் அயோத்யாவில் 1992 ல் நடந்த நிகழ்வுக்கு பின் தான் இந்தியாவில் ஹிந்து முஸ்லீம் கலவரங்கள் அதிகரித்ததாக சொல்லப்படுவது தவறு என்பதை 1986-1991 வரை சம்பவங்கள் பல நிரூபிக்கும்.

ப.சிதம்பரம் அவர்களே, ஹஷிம்புராவில் முஸ்லிம்கள் எப்படி குறிவைக்கப்பட்டார்கள் என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?

ஓட்டுக்காக , ஆட்சிக்காக, ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பகைமையை வளர்த்தது காங்கிரஸ் தான் என்பதற்கு இதை விட வேறேதேனும் சான்று தேவையா? ஹஷிம்புரா, மாலியானா, முஸாபஃர்பூர் ஆகிய இடங்களில் இதே போன்ற பல சம்பவங்களை அரங்கேற்றியது யார்?

`காங்கிரஸ் கைகளில் இஸ்லாமியர்களின் ரத்தக்கறை உள்ளது’ என 23/04/2018 அன்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் ஒப்பு கொண்டது குறித்து தங்களின் கருத்து என்ன?

“ஜெர்மனியில் எப்படி யூதர்கள் குறிவைக்கப்பட்டார்களோ, அதே போன்று இந்தியாவிலும் இஸ்லாமியர்களை தாக்குவதற்காகவும், தனிமைப்படுத்தவும் முயற்சிகள் நடைபெறுகின்றன” என்று கேட்ட உங்களுக்கு தான் அதற்கான காரணத்தையும், பதிலையும் சொல்லவேண்டிய கடமையுள்ளது.

ஹிந்துக்கள் மீது, பாஜக மீது இஸ்லாமியர்களுக்கு வெறுப்பை தூண்டும் வகையில் நடந்திருக்க கூடிய பல்வேறு சம்பவங்களை இஸ்லாமிய சமுதாயம் அறிந்து கொள்ளுமா? மதச்சார்பற்றவர்கள் என்ற போர்வையில் ஓட்டுக்காக மதவாத அரசியலை முன்னெடுக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளை உணர்ந்து கொள்ளுமா?

பதில் சொல்லுங்கள் ப.சிதம்பரம் அவர்களே, இந்த சதி திட்டங்களை தீட்டியது யார்? ஏன்? எதற்காக?

நாராயணன் திருப்பதி.
பாரதிய ஜனதா கட்சி.