‘இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்’: பிரதமர் மோடி

”மத்தியில் பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும் போது, சர்வதேச அளவில் நம் நாடு, மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயரும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுடில்லியில், பாரத் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியை நேற்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

அதன்பின் அவர் பேசியதாவது: நம் நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடற்பரப்பு மற்றும் மலைப்பகுதிகளில் கட்டுமானம் எழுப்பும் வகையில், நம் பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். இதற்கு அடல் சுரங்கப்பாதையும், அடல் சேது மேம்பாலமும் நம் கண்முன்னே சாட்சிகளாக விளங்குகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில், 75 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன; 4 லட்சம் ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டில் 2,000 எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின; தற்போது, 12 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின்றன. இதேபோல், பயணியர் வாகனங்களின் விற்பனையும், 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டமாக, உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களை பயன்படுத்தி வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன. நம் நாடு வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது; மத்தியில் பா.ஜ., மூன்றாம் முறையாக ஆட்சி செய்யும்போது சர்வதேச அளவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக, நம் நாடு உயரும். இவ்வாறு அவர் பேசினார்.