இலங்கை தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, யாழ்ப்பாணம் எம்.பி.,யும், வடக்கு மாகாண முன்னாள் முதல்வருமான விக்னேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் புதுடில்லியில் முகாமிட்டு உள்ளனர். கடந்த 2009ல் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின், அங்கு தமிழர் வாழும் பகுதிகளில் புதிதாக வீடு கட்டுதல் உள்ளிட்ட புனரைமப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், யாழ்ப்பாணம் மாவட்ட தற்போதைய எம்.பி.,யுமான விக்னேஸ்வரன், எம்.பி., சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும், சில முன்னாள் எம்.பி.,க்கள் புதுடில்லி வந்துள்ளனர்.
நாளை வரை புதுடில்லியில் தங்கவுள்ள இவர்கள், பல்வேறு தரப்பினரையும் சந்திப்பதோடு, சில கருத்தரங்குகளிலும் பங்கேற்க உள்ளனர். இது குறித்து, நிருபர்களிடம் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் கூறியதாவது: தமிழர்களின் பகுதியான வடக்கையும் கிழக்கையும், சிங்கள மக்களைக் கொண்டு இலங்கை அரசு தீவிரமாக ஆக்கிரமித்து வருகிறது. இதிலிருந்து தமிழர்கள் தப்பி பிழைக்க வேண்டுமெனில், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்.
இந்த ஒப்பந்தம் வழங்கும் அதிகாரப் பகிர்வு தான், தமிழர்களை காப்பாற்றும். 13வது சட்டத்திருத்தம் மட்டுமல்லாது, அதன் கீழ் மாகாண சபை நடைமுறையையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழரின் பூர்வீக இடங்கள் முழுக்க சிங்கள, பவுத்த மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பதை இனியும் வேடிக்கை பார்ப்பது முறையல்ல. மேலும், சீனாவின் ஆதிக்கம், இலங்கையில் அதிகரித்து வருகிறது.இதற்கெல்லாம் தீர்வு தரக்கூடிய பலம், இந்தியாவிடம் தான் இருக்கிறது. இந்தியாவை பெரிதும் நம்புகிறோம். இந்தியாவுக்கு எப்போதுமே பக்கபலமாக இருக்கும் இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற, உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.