இந்தியாவில் விற்பனையாகும் செல்போன்களில் 99.2 சதவீதம் உள்நாட்டில் தயாரானவை: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

 

கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்தது.இதையடுத்து, வெளிநாட்டு நிறுவனங்கள் செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவின.

இந்நிலையில், செல்போன் உற்பத்தி குறித்த ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் இத்துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர். செல்போன் உற்பத்தித் துறையின் சாதனைகளை அங்கீகரிப்பதற்கும், இத்துறையில் வளர்ந்து வரும் சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், நிலையான வளர்ச்சிக்கான உத்திகளை ஆராய்வதற்கும் இந்த கூட்டம் ஒரு தளமாக அமைந்தது. எதிர்கால வாய்ப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வெற்றியை தக்கவைத்துக் கொள்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான கூட்டு முயற்சிகள் குறித்து ஆக்கபூர்வமாக விவாதிப்பதற்கு இந்தக் கூட்டம் உதவியாக இருந்தது. இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் செல்போன் உற்பத்தித் துறை முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திருப்தி தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “செல்போன் உற்பத்தி துறையின் முன்னேற்றம் குறித்து ஆராய,துறை சார்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடினேன். கடந்த 9 ஆண்டுகளில் இத்துறை 20 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2014-ல் 78% செல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனையான செல்போன்களில் 99.2% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை” என பதிவிட்டுள்ளார். செல்போன் துறையின் வளர்ச்சி உள்நாட்டு உற்பத்தி சூழலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இறக்குமதியைசார்ந்திருப்பதைக் குறைக்கவும் கணிசமாக பங்களித்துள்ளது. முன்னதாக, கூகுள் நிறுவனம் இந்தியாவில் செல்போன் உற்பத்தியை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தது. இதன்படி, சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களைப் பின்பற்றி கூகுள் நிறுவனமும் செல்போன்களை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.