உத்தர பிரதேசம் டுமரியாகன்ஜ் தொகுதியில் 6-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜகதாம்பிகா பால்-ஐ ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் நேற்று பிரச்சாரம் செய்தார். சித்தார்த்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
முதல் ஐந்து கட்ட தேர்தல்களில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது. அகிலேஷ் யாதவுக்கு 4 இடங்கள் கூட கிடைக்காது. ஆனால், பாஜக ஏற்கெனவே 310 என்ற இலக்கை தாண்டிவிட்டது.
எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. ஓட்டுவங்கி அரசியலால் ராகுல் மற்றும்அகிலேஷ் ஆகியோர் கண்மூடித்தனமாக செயல்படுகின்றனர். மதஅடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நாங்கள் ஒழிப்போம். அதைஎஸ்.சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு திரும்ப அளிப்போம். இண்டியா கூட்டணியில் பிரதமர்வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்படவில்லை. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 பிரதமர்கள் உருவெடுப்பர். இதுபோல் நாடு செயல்பட முடியுமா? தேர்தல் முடிவுகள் வெளியான பின்பும் ராகுலும், அகிலேஷ் யாதவும் வெளிநாடு சுற்றுலாப் பயணம் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துவைத்துள்ளனர்.
ஒருபுறம் ராகுல் இத்தாலி, தாய்லாந்து என சுற்றுலா செல்கிறார். மறுபுறம் நரேந்திர மோடி23 ஆண்டுகளாக விடுமுறையைஎடுக்காமல், தீபாவளி பண்டிகையைக் கூட எல்லையில் ராணுவத்தினருடன் கொண்டாடுகிறார். ராணுவத்தினருக்கு ஒரே பதவிக்கு,ஒரே ஓய்வூதியம் திட்டத்தை பாஜகஅரசுதான் உறுதி செய்தது. மோடியின் 3-வது ஆட்சியில், இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக மாறும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி.அதை பாஜக திரும்பப் பெறும்.பாகிஸ்தானிடம் அணு குண்டுஇருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். அணுகுண்டுக்கு எல்லாம் பாஜகவினர் பயப்படமாட்டார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாங்கள் மீட்போம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.