திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று மு.க.ஸ்டாலினால் கூறமுடியுமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக கட்சி தொடங்கிய நாளன்று சென்னை ராபின்சன் பூங்காவில் 26 பேர் பேசினார்கள். அதில் கருணாநிதி பெயர் மட்டும்தான் நமக்குத் தெரியும். மீதமுள்ள 25 பேரின் பெயர்கள் யாருக்காவது தெரியுமா?
குடும்ப அரசியலால் எந்த தகுதியுமே இல்லாமல் ஒரு கூட்டம், நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. தகுதி இல்லாதவர், தங்களைச் சுற்றி தகுதி இல்லாதவர்களையே நியமிப்பார்கள். இதனால்தான் தமிழக நிர்வாகம் சீர்குலைந்து போயுள்ளது.
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இலாகா இல்லாத அமைச்சர் என்று 7 மாதங்களாக மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சாதியை ஒழித்தோம் என்ற பெயரில் சாதியை வளர்த்து, 50 ஆண்டுகாலமாக சாதி அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
கடந்த 10 ஆண்டுகளாக ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலன் போற்றும் ஆட்சி மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் 75 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒருவர் மீதுகூட ஊழல் குற்றச்சாட்டு வைக்க முடியாது. மோடி வந்தால்தான் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும். பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினால், மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
பாஜக சரித்திரத்தில் பிரதமர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்தித்தது கிடையாது. 2014-ம் ஆண்டு தேர்தலில்தான் மோடியின் பெயரை முதன்முதலாக பிரதமராக அறிவித்து தேர்தலை பாஜக சந்தித்தது. திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யார் என்று முதல்வர் ஸ்டாலினால் கூறமுடியுமா?
ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலன் சார்ந்த, புதிய அரசியல் சகாப்தத்தை தமிழகத்தில் எழுதுவதற்கான நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.