“இணைந்து செயல்படு,  வெற்றி காண்”

நெல்லை சு. முத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி. பள்ளி நாட்களில் இருந்தே படிப்புடன் கூடவே இலக்கிய ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டவர். பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் பெற்றவர். விஞ்ஞானத்தை  உயர் தொழில் நுட்பத்தை எளிய தமிழில் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் விதம் தினமணி, கலைமகள் முதலிய பல பத்திரிகைகளில் எழுதி வருபவர் இவர். ஆக்க பூர்வமான தேசிய கருத்துக்களை ஊடகங்களில் வெளிப்படுத்துவார். மிளிரும் புத்தொளி நம்பிக்கைத் தொடரின் இந்த வாரம் நாம் காண்பது நெல்லை சு முத்து உடனான பேட்டி. பேட்டியின் முதல் பகுதி இன்று சனிக்கிழமையும் இரண்டாம் (நிறைவு) பகுதி நாளை ஞாயிற்றுக் கிழமையும் வெளிவரும். உரையாடுபவர் எம்ஆர்.ஜம்புநாதன்.

கொரோனா நோய், அதன் பாதிப்புகள் உங்கள் பார்வையில்.

மத்தியக் கிழக்கு மூச்சுத்திணறல் அறிகுறியான மெர்ஸ் (மிட்டில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்) மற்றும் தீவிர இடையறா மூச்சுத்திணறல் அறிகுறியான சார்ஸ் (சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்) போன்ற நோய்க் குடும்பத்தின் மற்றொரு பயங்கரவாதி சார்ஸ் கோவி 2 (Sars cov 2) என்னும் வைரஸ் இதனைப் பொதுவாக கொரோனா வைரஸ் டிசீஸ் என்ற அளவில் கோவிட் 19 என்று இப்போது குறிப்பிடுகிறோம்.

வைரஸ் என்பது தனியொரு மின்னணுவுடன் தாறுமாறாகச் சுற்றித் திரியும் தனித்த அணுத்தொகுதி ஆகும். இதனை வேதியலில் ஃப்ரீ ரேடிக்கல் (free radical) என்று குறிப்பிடுவோம். இந்த வைரஸ் ஒரு மின்னணுத் துப்பாக்கியுடன் திரியும் தீவிரவாதி மாதிரி. அதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் பற்கள் போன்ற அடினின், யுராசில், குவானின், சைடோசின் போன்ற சிறுமென்காரங்களும் தனித்த அணுத்தொகுதிகள் தாம்.

இது ரத்தத்தில் இரும்புச் சத்து அடங்கிய சிகப்பணு ஆகிய ஹீமோகுளோபினோடு கை குலுக்கினால், அவ்வளவுதான் உயிர்த்திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவைச் சுமந்து செல்லும் அதன் செயல்பாடு முடங்கும். அப்புறம் என்ன? மூச்சுத்திணறல், சளி பிடிக்கும். அதனைப் போக்க உடம்பு முயற்சிப்பதால் இரத்தத்தின் வெள்ளணுக்கள் போர்வீரர்கள் மாதிரி அங்கு படையெடுக்கும். அதனால் உடல் சூடேறும். நிமோனியா வரை காய்ச்சல் அதிகரிக்கும்.

இந்தத் தனித்த அணுத்தொகுதியை உடம்புக்குள் நுழையவிடாமல் தடுப்பதும், நுழைந்தால் அதற்கான மாற்று அல்லது எதிர்ப்பொருளை அளித்து, அந்தத் தனி அணுத்தொகுதியின் போக்கைக் கட்டுப்படுத்துவம்தான் சிகிச்சைக்கான வழி.

அடிப்படையில் நீங்கள் ஒரு வேதியில் விஞ்ஞானி இந்தத் துறையில் வரக்கூடிய மாற்றங்கள், வாய்ப்புகள் பற்றி.

உள்ளபடியே இன்று அறிவியலில் மட்டுமல்ல, எந்தத் துறையிலுமே பிற துறை நிபுணர்கள் அல்லது பலதுறை நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தனித்தனி ஆயவகங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுவந்தாலும், அல்லோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி என ஆங்காங்கு பலன்தரும் சிகிச்சை முறைகளைப் தேடிக் கண்டடைய வேண்டும். இத்தகைய முயற்சிகளின் சாத்தியக்கூறுகளையே விவாதித்துக் கொண்டிராமல் முதலில் ஒருங்கூட்ட முயல்வோம்.

தனி தீவாக இருந்து விடாமல் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொண்டால் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்; வெற்றி காணலாம்.

நீங்கள் பார்க்கும் நல்ல வாய்ப்புகள் வேதியல், விண்வெளி இவற்றுடன் தொடர்புடைய துறைகளில்….

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு இளநிலைப் பட்டம் பெற்ற காலகட்டத்தில் கரிம வேதியல், கனிம வேதியல், இயற்பு வேதியல், கோட்பாட்டு வேதியல்  ஆகியவற்றுடன் சோதனைச்சாலையில் பகுப்பாய்வு வேதியலும் கற்றோம். ஆனால் இன்றைக்கு அதில் இருந்து எத்தனையோ கிளைகள் தனித்தனியே ஆலவிருட்சமாக வேர் பரப்பி விட்டன.

கணிதவியலுக்கு எண்கள் எப்படி ஆதாரமோ, அப்படித்தான் வேதியிலுக்கு மின்னணுக்கள், தனிம அணுக்கள், மூலக்கூறுகள், அவற்றின் பிணைப்புகள், கரைசல் ஊடகம், அதன் அமில காரத் தன்மை, வெப்பநிலை, அழுத்தம், காந்தப்புலம், புவியீர்ப்புநிலை, அருகிலுள்ள ஏனைய மூலக்கூறுகள் என மனிதர்களுக்கு வாய்த்த அத்தனைச் சுற்றுச்சூழல்களும் இந்த அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் உள்ளன.

உடல் என்கிற  உயிரித் தொழிற்சாலையில் இயல்பாகவே அத்தனை வினைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுவே உயிர்த்துவம்.

எப்படியோ, ஒரு காலத்தில் ரசவாதம் என்று தொடங்கிய ஆரம்ப வேதியில் இன்றைக்கு, உணவு வேதியியல், உயிரி வேதியில், வேளாண் வேதியில், விண்வெளி வேதியியல், வளிமண்டல வேதியியல், உயிரிவேதியியல், தாவர வேதியியல், கூடுகை வேதியியல் புவிவேதியியல், மருந்து வேதியியல், பன்கூறு வேதியியல், ஒளிவேதியியல், காந்த வேதியியல், மூலக்கூறு வேதியியல், மூலிகை  என்று நீண்டு வேதியியல் ஆகிய நானோ கெமிஸ்ட்ரி வரை பலதுறை ஆய்வுகளாக வாய்ப்புகள் பல்கிவிட்டன.

மூலக்கூறு, மருந்து,   உயிரி வேதியல் மற்றும் சில அடிப்படைத் துறைகளின் தொகுப்பே மருத்துவம். அதைப் போலவே வெவ்வேறு அறிவியல் தொகுப்புகள் பல்வேறு புதுத்துறைகளை உருவாக்கும்.

One thought on ““இணைந்து செயல்படு,  வெற்றி காண்”

Comments are closed.