ஆளுநர் ஆலோசகராக பாலகுருசாமி

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநரின் கெளரவ கல்வி ஆலோசகராக, ஓய்வுபெற்ற பேராசிரியரும் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் தமிழக மாநில திட்டக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும் யூனியன் பப்ளிக் சர்வீசு குழுவில் உறுப்பினராகவும் இருந்தவருமானமான இ. பாலகுருசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜார்க்கண்ட் மாநில ஆளுநரின் முதன்மைச் செயலர் நிதின் மதன் குல்கர்னி வெளியிட்டுள்ளார். ஜர்கண்ட் மாநில ஆளுநரும், அம்மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, மாநிலத்தின் உயர் கல்வித்துறையையையும் பாடத் திட்டங்களையும் மேம்படுத்துதல், பல்கலைக் கழக செயல்பாடுகள் சீர்திருத்தம், உயர்கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகளைக் களைவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது இவரது முக்கியப் பணிகளாகும். இதுகுறித்து  செய்தி நிறுவனம் ஒன்றுடன் பேசிய பாலகுருசாமி, “கல்வியில் பின் தங்கியுள்ள ஒரு மாநிலத்தில் பணியாற்றி, அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் கல்வியையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்தவும், புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தவும், கல்வியில் புதுமையைப் புகுத்தவும் முயற்சிப்பேன். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தப் பாடுபடுவேன். அங்குள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த மாநில கல்வி நிலை குறித்து தெரிந்துகொண்டு, எங்கெல்லாம் இடர்பாடுகள் உள்ளன, என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை அறிந்து அவற்றை களைந்து கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும். கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு போன்றவற்றை மேம்படுத்தும் வகையில், பாடத் திட்டங்களை மாற்றுவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இதற்காக, அங்குள்ள கல்வியாளர்கள் அனைவருடனும் ஒருங்கிணைந்து, கூட்டு முயற்சியின் அடிப்படையில் கல்வித் துறையை மேம்படுத்துவேன்” என கூறினார்.