ஆற்றுக்கால் பகவதி கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நேற்றுநடந்த பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி, கொடுங்கல்லுார் சென்றதாகவும், வழியில் திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும் நம்பப்படுகிறது.அவர் தங்கிய இடத்தில் கட்டப்பட்ட கோவிலே, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழா, மிகவும் சிறப்பு பெற்றதாகும்.கடந்த, 1ம் தேதி விழா துவங்கியது. ஒன்பதாம் நாளான நேற்று காலை, 10:30 மணிக்கு, கோவில் முன்புறம் உள்ள அடுப்பில், பூஜாரிகள் தீ மூட்டியதும், ஒலிப்பெருக்கியில் செண்டை மேளம் முழங்கப்பட்டது.

தொடர்ந்து, அனைத்து இடங்களிலும், அடுப்புகளில் தீ மூட்டி, பெண்கள் பொங்கலிட்டனர். கோவிலை சுற்றி, 10 கி.மீ., சுற்றளவில் ரோடு, மைதானம், பஸ் ஸ்டாண்ட், வயல் வெளிகள், தென்னந்தோப்புகள் என அனைத்து இடங்களிலும், பெண்கள் பொங்கலிட்டனர்.பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் விழாவாக நடத்தப்பட்டது. இரவு, 11:15 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு, 12:00 மணிக்கு குருதி பூஜையுடன் விழா நிறைவு பெறும். இந்த பொங்கல் விழா, இரண்டு முறை, கின்னஸ் சாதனைபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

‘கொரோனா’ பீதியால், பொங்கல் விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆயினும், திட்டமிட்டபடி பொங்கல் விழா நடந்து முடிந்தது. விழாவில், கொரோனா குறித்து, விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.