ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) புனே நகர செயலாளர் மகேஷ் கார்பே, காவல்துறை மற்றும் சைபர் குற்றப் பிரிவில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், “வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு,, அதன் சித்தாந்தத்தைப் பின்பற்றும் அமைப்புகளை அவதூறு செய்ய சதி நடக்கிறது. சத்ரபதி சிவாஜி அவரது தாயான ராஜமாதா ஜிஜாபாய் ஆகியோர் மீது தேசம் முழுவதும் உள்ள குடிமக்களின் இதயங்களில் அபரிமிதமான மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் சங்கராஜ் (RSS Sanghraj) என்ற முகநூல் பக்கத்தில் அவர்கள் மீது அவதூறு பரப்பப்படுகிறது. இதன் மூலம் சங்கம் மற்றும் அதுசார்ந்த அமைப்புகளை இழிவுபடுத்த முயற்சிகள் நடக்கின்றன. மேலும், பாபாசாகேப் புரந்தரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீதும் மிகவும் தரம் தாழ்ந்த கருத்துக்கள் இந்த சமூக ஊடக பக்கத்தில் இருந்து பரப்பப்படுகின்றன. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் சங்கராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முகநூல் பக்கம் போலியானது. சங்கம் அல்லது ஸ்வயம்சேவகர்களால் உள்ளடக்கம் எதுவும் அதில் வெளியிடப்படவில்லை. சங்கம் மற்றும் சங்க ஸ்வயம்சேவகர்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இத்தகைய உள்ளடக்கம் வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. காவல்துறை மற்றும் தொடர்புடைய சைபர் ஏஜென்சிகள் இதை கவனத்தில் கொண்டு விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காவல்துறை மற்றும் சைபர் கிரைம் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.