ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த பிரசாரக், பாரதிய ஜன சங்கத்தின் முக்கிய பொறுப்பாளருமான பி.பரமேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஓட்டப்பாலத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை 12.10 மணியளவில் உயிரிழந்தார் என ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பரமேஸ்வரனின் உடல் இன்று பிற்பகலில் கொச்சியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அங்கிருந்து இருந்து சொந்த ஊரான முகம்மாவிற்கு கொண்டுச் செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறும் ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், சோ்த்தலாவட்டம், முகம்மா கிராமத்தில் கடந்த 1927 ஆம் ஆண்டு பிறந்த பரமேஸ்வரன், சங்கனாசேரி, எஸ்.பி.கல்லூரியிலும், பின்னா் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் பயின்றாா். கடந்த 1951 ஆம் ஆண்டு கல்லூரியில் பயின்ற போது ஆா்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடா்பு ஏற்பட்டது, பின்னா் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து முழு நேர பிரசாரகராக பணியாற்றி வந்தாா்.
பாரதிய ஜன சங்கத்தின் தீனதயாள் உபாத்தியாயா, ஆர்எஸ்எஸ் அமைப்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எல்.கே.அத்வானி போன்ற தலைவர்களுடன் பணியாற்றியவருக்கு அவரது சேவையைப் பாராட்டி, கடந்த 2004 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பத்ம ஸ்ரீ விருதும், 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, இவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவித்தனர்.
சங்க பரிவார் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர்களால் பரமேஸ்வர் ஜி என்று அழைக்கப்படும் பரமேஸ்வரன் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் பரவலாக மதிக்கப்படும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி. அவர் பாரதிய ஜன சங்கத்தின் செயலாளராகவும் (1967-1971), துணைத் தலைவராகவும் (1971-1977), அதே போல் புதுதில்லியில் உள்ள தீன்தயாள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (1977-1982) இயக்குநராகவும் இருந்துள்ளார். மிசா காலங்களில் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.
கேரள மாநிலத்தில் ராமாயணம், மற்றும் மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை பரப்ப பெருமுயற்சி மேற்கொண்டாா். கேரள மக்களிடையே தேசியவாத எண்ணங்களை வளர்ப்பதற்காக, 1982 ஆம் ஆண்டு பாரதிய விசாரா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவியவர்.