நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டே வருகிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கூறியது சிந்தனைக்குரிய விஷயம்.
பார்க்கப்போனால் சமஸ்கிருதம் பற்றி அவரது எண்ணம் அம்பேத்கரின் கருத்துக்களில் பலருக்கும் தெரியாத ஒன்று. நான் மனித வள ஆற்றல் துறை அமைச்சராக இருந்தபோது சமஸ்கிருதம் ஆட்சி மொழி என்பது குறித்த சமஸ்கிருத கமிஷன் அறிக்கையை பார்க்க நேர்ந்தது. அந்த அறிக்கையில் காணப்பட்ட விஷயம் இது: அரசியல் நிர்ணய சபையில் இந்த விஷயம் குறித்த விவாதத்தால் புயல் வீசிய தருணங்களில் சமஸ்கிருதத்தை ராஷ்ட்ர பாஷா ஆக்கலாம் என்று யோசனை தெரிவித்து இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி நடந்தது. காலம் சென்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களும் இந்த யோசனையை ஆதரித்ததாக செய்தி வெளியானது.
சபையில் 310ஏ(1) என்ற எண்ணுள்ள திருத்தத்தை முன்மொழிந்த காலஞ்சென்ற எல்.கே.மைத்ரா, சமஸ்கிருதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பொறாமை எல்லாம் மறைந்துவிடும், கசப்பு ஒழிந்துவிடும், ஏதோ ஒன்றின் ஆதிக்கமோ திணிப்போ இருப்பது போன்ற எண்ணம் எல்லாம் அற்றுவிடும்” என்று கூறினார்.
இது 1949 செப்டம்பர் 11 தேதியிட்ட
‘த சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்டு’ பத்திரிகையில் வெளியான செய்தி: இந்திய யூனியனின் ஆட்சி மொழியாக சம்ஸ்கிருதம் ஆவதை ஆதரித்தவர்களில் இந்தியாவின் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர்”. இந்த முயற்சி குறித்து அன்று மாலை கேட்கப்பட்டபோது டாக்டர் அம்பேத்கர் பிடிஐ நிருபரிடம் இவ்வாறு கூறினார்: சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஏற்றால் என்ன தவறு?”
அந்தப் பத்திரிகைச் செய்தியில் மேலும் இவ்வாறு கண்டிருந்தது: அரசியல் நிர்ணய சபை, ஆட்சி மொழி குறித்து விவாதிக்கும் பொழுது சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்குவதற்கான திருத்தம் கொண்டுவரப்படும்”.
உண்மையில், அம்பேத்கர் அந்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடவே விரும்பினார்; ஆனால்
ஸ்ரீ பி.பி.மௌரியா உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்த்ததால் அதை வாபஸ் பெற நேர்ந்தது. பின்னாளில் 2001 பிப்ரவரி 14 அன்று என்சிஈஆர்டி இயக்குனருக்கு மௌரியா எழுதிய கடிதத்தில், தான் அவ்வாறு எதிர்த்தது குறித்து வருத்தம் தெரிவித்தார். அப்போது எனக்கு அனுபவம் போதாது. எனவே நான் அந்த தீர்மானத்தை எதிர்த்தேன். கடைசியில் அந்த தீர்மானமே கைவிடப்பட்டது.”
ஸ்ரீமைத்ரா முன்மொழிந்த அந்த திருத்தம், கடுமையான விவாதத்திற்குப் பிறகு, துரதிருஷ்டவசமாக தோற்கடிக்கப்பட்டது; பாரதத்தை மொழி ரீதியாக ஒற்றுமைப்படுத்தும் டாக்டர் அம்பேத்கரின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது.
சமஸ்கிருதத்துடன் டாக்டர் அம்பேத்கரின் உறவுக்கு ஒரு காரணம் உண்டு. ‘ஆரிய படையெடுப்பு என்பது உண்மையா’ என்பது குறித்து அவர் அறிந்துகொள்ள அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே அவர் சமஸ்கிருதத்தை அணுகினார்.
அதற்காக அவர் வேதங்களையும் ‘ஜெண்டு அவஸ்தா’ புனித நூலையும் திறந்த மனதுடன் ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் எழுதினார்: ‘வர்ணம்’ என்பது ஆதியில் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையை சார்ந்தவர்களை குறித்த சொல் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஜெண்டு அவஸ்தா சான்று தருகிறது.
வர்ணம் என்பதற்கும் மனிதரின் நிறத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது தெளிவு. சரி, மேற்கத்திய தியரியை ஆய்ந்து பார்த்தால் பின்வருமாறு முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
* ஆரிய இனம் என்பதாக ஒன்றை வேதங்கள் சொல்லவில்லை.
* ஆரிய படையெடுப்பு நடந்ததாக வேதத்தில் ஆதாரம் எதுவும் இல்லை. எனவே ஆரியர்கள் இந்த தேசத்தின் ஆதி குடிகள் என்று கூறப்படும் தஸ்யூக்களையும் தாஸர்களையும் தோற்கடித்ததற்கும் ஆதாரம் ஏதும் இல்லை.
*ஆரியர்களுக்கும் தஸ்யூக்களுக்கும் உள்ள வித்தியாசம் இன வேறுபாடு என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
* தஸ்யூக்களிடமிருந்து ஆரியர்கள் நிறத்தில் வேறுபட்டிருந்தார்கள் என்ற கருத்தை வேதங்கள் ஆதரிக்கவில்லை.
ஒரு தேசத்தாரின் இனத்தை தீர்மானிப்பதற்கு மனித அவயவங்களின் அளவீடு (anthropometry) என்ற அறிவியல் உதவுகிறது என்றால், அளவெடுத்துப் பார்த்ததில் பிராமணர்களுக்கும் தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்பட்டவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. அவர்கள் ஒரே இனம் என்பது முடிவாகிறது.”
டாக்டர் அம்பேத்கர் கண்டறிந்த முடிவுகள் தெள்ளத்தெளிவாக உள்ளன. ஆனால் அவரது கருத்துக்களை அடியொற்றி நடப்பவர்களாக தங்களைக் கூறிக்கொள்பவர்கள் அம்பேத்கரின் இந்த முடிவுகளை புறக்கணிப்பதுடன், அவர் தகர்க்க விரும்பிய இன கோட்பாட்டை விண்ணதிர முழக்கவும் தயங்குவதில்லை. இது துரதிருஷ்டவசமானது.
அதற்காக, ஹிந்து சமுதாயத்தை சீர்திருத்த அம்பேத்கர் செய்த முயற்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று பொருளல்ல. எவ்வளவு விசையுடன் அவர் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்கும் யோசனையை முன்வைத்தாரோ, அதே விசையுடன் ஹிந்து சமுதாயத்தில் காணப்பட்ட நாற்றமெடுத்துப்போன ஜாதி முறையையும் தீய பழக்கங்களையும் எதிர்த்தார். உண்மையான ஜனநாயக இந்தியாவை நிர்மாணிப்பதில் ஹிந்து சமுதாயத்தின் இந்த கேடுகள் முட்டுக்கட்டை என்று அவர் கருதினார்.
இந்தப் பின்னணியில் டாக்டர் அம்பேத்கரின் போதனைகளை முழுமையாக இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்ல நாடுதழுவிய ஒரு பின்னல் வலை அமைப்பு உருவாக்கும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது. உயர் கல்வி நிலையங்கள் இதற்கு என பொருத்தமானதொரு வியூகத்தை வகுக்கவேண்டும்.
(பாஜகவின் முன்னாள் அகில பாரதத் தலைவரும் மத்திய மனிதவள ஆற்றல் துறை முன்னாள் அமைச்சருமான கட்டுரையாளர், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் எழுதிய கட்டுரையிலிருந்து)