ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விடாவிட்டால் சிறை: காஷ்மீர் காவல் துறை எச்சரிக்கை

காஷ்மீர் காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சாலையில் செல்லும் அனைத்து பயணிகளும் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட வேண்டும். குறிப்பாக நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கட்டாயம் வழிவிட வேண்டும்.
வழிவிடத் தவறுவது, மோட்டார் வாகனச் சட்டத்தின் 194இ பிரிவின் கீழ் குற்றமாகும். இதற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பொதுமக்கள் ஏதேனும் மருத்துவ அவசரம் ஏற்பட்டால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் மருத்துவமனைகள் அல்லது பிற சுகாதார மையங்களை தொடர்பு கொள்வதுடன், நகர் நகராட்சி எல்லைகளுக்குள் நோயாளிகளை சிரமமின்றி அழைத்துச் செல்வதற்கு போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள அறிவுறுத்துகிறோம்.
நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் ஹெல்ப்லைன் எண்களில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவுடன் நெருங்கிய தொடர்பைப் பேண வேண்டும். இது நோயாளிகளை மருத்துவமனைக்கு இடையூறின்றி கொண்டு செல்ல உதவும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.