சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “மாதம் ஒருமுறை மின் அளவீடு செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.கஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்துவிடுவார்கள் என தி.மு.க நினைப்பது தவறானது. பல முறைகேடுகள் மூலம் நடந்த ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை ரத்து செய்து, மறுதேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கம் தி.மு.க அரசுக்கு கிடையாது. நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதைபோல, தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை வைத்தும் தி.மு.க அரசியல் செய்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கு மத்திய அரசுதான் சட்டம் இயற்ற முடியும் என்ற வலுவான காரணத்தை ஆளுநர் கூறியிருக்கிறார். அதை சட்டரீதியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மீது வீணாக குறை கூறக்கூடாது” என கூறினார்.