ஆசியான் மற்றும் பாரத வெளியுறவு அமைச்சர்களின் சிறப்பு மாநாட்டை ஜூன் 16, 17 தேதிகளில் பாரதம் நடத்தவுள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, ‘வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்கள். மற்ற ஆசியான் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஆசியான் பொதுச்செயலாளர் கூட்டத்தில் பங்கேற்பார்கள். 2022ம் ஆண்டு ஆசியான் பாரதம் நட்பு ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ‘உரையாடல் உறவுகளின்’ 30வது ஆண்டு நிறைவையும், பாரதம் ஆசியான் கூட்டாண்மையின் 10வது ஆண்டு நிறைவையும் குறிக்கும் வகையில் இந்த சிறப்பு கூட்டத்தை பாரதம் நடத்தும்’ என தெரிவித்தார். மேலும் அவர், ‘சமீபத்தில் கராச்சியில் உள்ள ஒரு ஹிந்து கோயில் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இது பாகிஸ்தானில் உள்ள மத சிறுபான்மையினரை திட்டமிட்டே துன்புறுத்தும் மற்றொரு செயல் என்று நாங்கள் நம்புகிறோம். சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதி செய்ய வலியுறுத்தி பாகிஸ்தான் அரசுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்’ என்றார்.