ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணி என்ன என்பதை நன்கு புரிந்துகொண்டால் தான் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முடியும். அம்பேத்கரின் பெயரால் தலித் மக்கள், குறிப்பாக மாணவர்கள் தவறான வழியில் திசை திருப்பப்பட்டு வருகிறார்கள்.
மார்க்ஸிஸ்டுகள், ஜிகாதிகள், தலித்துகள் அனைவரும் ஏறத்தாழ ஒரே நிலையில் உள்ளவர்கள்தான் என்பதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். அமைப்பைச் சேர்ந்த ஓவைசி போன்றோர் தொடர்ந்து துஷ்பிரச்சாரம் செய்து வருகின்றனர். மார்க்சிஸ்டுகளும் இத்தகைய நிலைப்பாட்டுக்கு அனுசரணையாகவே செயல்பட்டு வருகின்றனர்.
அம்பேத்கரை இந்த அழிவு சக்திகள் தங்களது நாசகார நிலைப்பாட்டுக்கு துணையாகக் கொள்வது, தலித் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை என்பதையே துல்லியமாகப் புலப்படுத்துகிறது. அம்பேத்கர், தனது ஆயுள் காலம் முழுவதும் மார்க்ஸிஸத்தையும் ஜிகாதி எதிர்த்தார். ஆனால் இன்று அம்பேத்கரின் பெயரை மார்க்ஸிஸ்டுகளும் ஜிகாதிகளும் உள்நோக்கத்துடன் உச்சரித்து விஷமத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
ஓரளவு விவரம் தெரிந்தவர்கள், சிந்திக்கக் கூடியவர்கள் கூட மார்க்ஸிஸ்டுகள், ஜிகாதியிஸ்டுகளின் பசப்பு வலையில் மயங்கி விழுந்துவிடுகின்றனர். ரோஹித் வெமுலா ஆராய்ச்சி மாணவர். அப்படிப்பட்டவரைக் கூட மார்க்ஸிஸ்டுகளும் ஜிகாதியிஸ்டுகளும் வளைத்து விட்டனர். ஏ.பி.வி.பி. மாணவர்களை தாக்கும் அளவுக்கு ரோஹித் வெமுலா போன்றோர் மூளைச் சலவைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்றால் விவரம் தெரியாத தலித் அப்பாவி மாணவர்களின் நிலை எப்படிப்பட்டது என்பதைக் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.
கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் தெலுங்கானாவிலும் இந்த நாசகார வலைப்பின்னல் வலுவாக உள்ளது. இதை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த மார்க்ஸிஸ்டுகளும் ஜிகாதியிஸ்டுகளும் முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டுள்ளனர். வாக்கு வங்கி அரசியலுக்காக வரலாற்றையே திரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை அம்பலப்படுத்த வேண்டியது தேசபக்தர்களின் தலையாய கடமை. அம்பேத்கர் எப்போதாவது மார்க்ஸிஸத்தை ஆதரித்து எழுதி இருக்கிறாரா, பேசி இருக்கிறாரா? என்பதையும் இஸ்லாமை அவர் வரவேற்று உரையாற்றியிருக்கிறாரா அல்லது கட்டுரை வரைந்திருக்கிறாரா? என்பதையும் நச்சுவலைப்பின்னல் கும்பலைச்
சேர்ந்த யாராவது வெளிப்படையாகத் தெரிவிக்க முன்வருவார்களா?
மார்க்சிஸ்டுகள், ஜிகாதிகளின் பிடியிலிருந்து அம்பேத்கரியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் ரோஹித் வெமுலாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுத்து நிறுத்த முடியாது. அம்பேத்கரும் சாவர்க்கரும் கொள்கை ரீதியாக எதிரிகள் என்றும் அம்பேத்கரும் சுவாமி விவேகானந்தரும் தத்துவ ரீதியாக வெவ்வேறு துருவங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் விஷமிகள் விஷப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அம்பேத்கருக்கு ஹிந்து மதம் தொடர்பாக சில வருத்தங்கள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் அவர் மற்றொரு சுதேசி மதமான பௌத்தத்தில் தான் சேர்ந்தாரே தவிர, எவ்வளவோ ஆசை காட்டிய பிறகும் கூட கிறிஸ்தவத்தையோ, இஸ்லாமையோ தழுவ மறுத்துவிட்டார் என்பதுதான் வரலாற்று உண்மை. இதே போல மார்க்ஸிஸத்தையும் அவர் கடுமையாக எதிர்த்துள்ளார்.
எனவே, அம்பேத்கரின் நிஜ பண்பை தலித்களிடையே எடுத்துரைத்து அழிவுப்பாதையிலிருந்து அவர்களை மீட்க, ஏ.பி.வி.பி. போன்ற அமைப்புகள் இன்னும் கூடுதல் முனைப்புடன் இயங்கவேண்டும்.