புதுச்சேரியில் ஆளுநர் அளித்த குடியரசு தின தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதைக் குறிப்பிட்டு, “அழைப்பு விடுத்தால், அன்புடன் பங்கேற்க வேண்டும்” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில், குடியரசு தினத்தையொட்டி நேற்று மதியம் தேநீர் விருந்து நடந்தது.இதில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், அதிமுகவினர் பங்கேற்றனர். இந்நிகழ்வை, எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், மற்றும் இடதுசாரிகள் புறக்கணித்தனர். பின்னர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசு தினத்தையொட்டி இரண்டு மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றியதை பெருமையாகக் கருதுகிறேன்.
ஆளுநர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வர வேண்டும். தெலங்கானாவில் ஏற்கெனவே பலமுறை அழைத்தும், முந்தைய முதல்வர் வரவில்லை. அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால், முதல்வர் அமைச்சரவையுடன் வந்து கலந்துகொண்டார்.
கொள்கைகள், கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தால், அன்புடன் பங்கேற்க வேண்டும். அரசியல் அனைத்து இடத்திலும் நுழைந்தால், நட்பு என்பது இல்லாமல் போய்விடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள். விருந்துக்கு வரவில்லை என்று சொல்வதை, சில கட்சிகள் நாகரிகம் எனக் கருதுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சியில் இருப்போரின் கூட்டணி ஆட்சிதான் கர்நாடகாவில் நடைபெறுகிறது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதை, தமிழக முதல்வர் நட்பு ரீதியாகச் சென்று தடுக்க வேண்டும். இவ்வாறு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.