நேதாஜிக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கும் கேள்வி எழும். இதோ பாரதியின் அழியாக் கவிதைகளைப் போல கம்பீரமாக எழுந்து நிற்கிறது ராயப்பேட்டையில் காந்திஜி பீக் மேன்ஷன். நேதாஜி 1939ம் ஆண்டு இந்த மாளிகைக்குதான் விஜயம் செய்தார், தங்கினார், உணவருந்தினார். பொறியாளரான அய்யாசாமி முதலியார், சுதந்திரம் நமது பிறப்புரிமை என்கிற மூச்சாலும் ஆர்வத்தாலும் இதைக் கட்டினார். அவர்களின் குடும்பம் அனுபவித்த சில நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அவரது பேரன்.
“காந்தி சிகரம்” (சுமார் எட்டாயிரம் சதுர அடி) கட்டி 93 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. பாரத சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக பிரிட்டிஷாரின் கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறையின் போது கூட, என் தாத்தா காந்திஜியின் பெயரை எங்கள் மாளிகையில் செதுக்கி, காந்திஜியின் சிலையை மாளிகையின் மேல் வைத்து கட்டும் அளவுக்கு தைரியம் கொண்டு இருந்தார்.
சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு காட்டியவர்களில் என் தாத்தாவும் ஒருவர். அவர் கட்டிய இல்லத்தில்தான் நேதாஜி 1939ல் மூன்று நாட்கள் தங்கியது நாங்கள் செய்த பாக்கியம். தாத்தாவோ காந்தியவாதி. காந்திஜியுடன் சில காரணங்களால் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நேதாஜி, காந்தியவாதி அய்யாசாமி முதலியாரின் இல்லத்திற்குச் சென்று தங்கியது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
வீட்டின் பெயர் காந்தி சிகரம். காந்திஜியுடன் உடன்படாத ஒருவர் எப்படி இந்த வீட்டில் இருக்க முடியும் என்று சிலர் கேட்கலாம். ‘சுபாஷ் சந்திர போஸ் வாழ்க’ என எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் வரவேற்க இங்குள்ள தெருக்கள் அவரை வாழ்த்தி வரவேற்றன. வீட்டின் மேல் பகுதியில் காற்றோட்டமான அறையில் தங்கியிருந்தார். இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், காந்திஜிக்கு ஏதாவது சிறப்பு செய்வதற்காக என் தாத்தா கட்டிய சிறப்பு அறையில் நேதாஜி வந்து தங்கி இருந்ததுதான். அவர் தங்கியிருந்த அறைக்கு மேலே. காந்தி சிலை.
ரேடியோ, சுவர்க் கடியாரம், தனித்த தொலைபேசி போன்றவை எல்லாம் சொகுசுப் பொருட்களாகக் கருதப்பட்ட அக்காலத்தில், என் தாத்தா ஒரு பெரிய கோயில் மணி போன்ற கண்டார் மணியை வாங்கி, அதனை காந்தி பீக் மாளிகை மேல் மாடிப்பகுதியில் ஊரே பார்க்கும் வண்ணம் வைத்து, காலை 5 மணி முதல் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அம்மணியை ஒலிக்க வைத்தார்.
மகள் அனிதா போஸ், காந்தி பீக்கில் தங்கியதைக் கேள்விப்பட்டு, 2005 டிசம்பரில் சென்னைக்கு வந்தபோது இங்கேயே தங்க முடிவு செய்தார். முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது இந்த வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் சில வாரங்கள் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.