குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில், தீயணைப்புத்துறை வாகனம் முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாம் பரிசை, காவல் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பெற்றன தமிழக அரசு சார்பில், சென்னையில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், அரசு துறைகள் சார்பில், 22 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், மங்கள இசையுடன் வந்த வாகனத்தின் முகப்பில், வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் படம் இடம் பெற்றிருந்தது. மற்றொரு வாகனத்தில், மதுரை ஏறு தழுவுதல் அரங்கம் மாதிரி வடிவமைக்கப்பட்டு இருந்தது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வாகனத்தில், சமீபத்தில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. வனத்துறை வாகனத்தில், உன்னி செடியில் உருவாக்கப்பட்ட, யானைகளின் சிற்பங்கள் இடம் பெற்றிருந்தன.
ஹிந்து சமய அறநிலையத்துறை வாகனம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை எடுத்துரைக்கும் வகையில் இருந்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வாகனத்தில், சமீபத்தில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் ‘லோகோ’ இடம் பெற்றிருந்தது; கபடி மற்றும் சிலம்பாட்டமும் இடம் பெற்றிருந்தது.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கான முதல் பரிசை, தீயணைப்புத் துறை பெற்றது.
இரண்டாம் பரிசை, காவல் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பெற்றன. மூன்றாம் பரிசை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பெற்றது. சென்னையில் நேற்று மாலை கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தின் போது, சிறந்த அணிவகுப்பு வாகனங்களுக்கான கேடயத்தை, உள்துறை செயலர் அமுதா, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் கவர்னர் ரவியிடம் பெற்றனர்.