இந்தியாவின் அங்கமான அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட 30 இடங்களின் பெயரை சீனா தன்னிச்சையாக மாற்றியமைத்துள்ளது. 4-வது முறையாக இதுபோன்ற அத்துமீறல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றிஉள்ளது. சீனாவால் மறுபெயரிடப்பட்ட இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு துண்டு நிலம் ஆகியவை அடங்கும். புதிய பெயரில் சீன எழுத்துகள், திபெத்தியன், பின்யின்,மாண்டரின் சீனத்தின் ரோமானிய எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி விரிவான அட்சரேகை, தீர்க்க ரேகைஅடங்கிய உயர்-தெளிவுத்திறன் கொண்ட வரைபடத்தையும் வெளியிட்டுள்ளதாக சீன சிவில் விவகார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ஹாங்காங் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா கடந்த 2017-ல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களை தன்னிச்சையாக மாற்றியது. அதையடுத்து, 2021-ல் 15 இடங்களின் பெயர்களையும், 2023-ல் 11 இடங்களின் பெயர்களையும் மாற்றி பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில், 4-வது முறையாக அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை சீனா தற்போது தன்னிச்சையாக மாற்றியமைத்துள்ளது. சீனாவின் இந்த மறுபெயரிடும் நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பெயரை மாற்றுவதால் எதார்த்த நிலையை ஒருபோதும் மாற்ற முடியாது’ என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.