அரசியலையும், பொருளியலையும் சீர்குலைக்கும் இலவசங்கள்

வறுமை தணிந்துள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிந்து வருகிறது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க அம்சங்கள். ஆனால் அதே நேரத்தில் இலவசங்களால் அரசியலும், பொருளியலும் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றன. இக்கட்டான தருணத்தில் உதாரணமாக கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளும் இலவசங்களை வழங்கின.

துரதிருஷ்டவசமாக ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இலவசங்களே அரசியலையும், பொருளியலையும் ஆட்டிப் படைக்கின்றன. இடைவிடாத முயற்சியின் வாயிலாக மட்டுமே வெற்றி இலக்கை எட்ட முடியும். வெறும் விருப்பங்கள் மூலமாக வெற்றி இலக்கை ஒருபோதும் எட்ட முடியாது என்பது அனுபவ ஞானம் சார்ந்த வழிகாட்டு நெறியாகும். உறங்கிக் கொண்டிருக்கின்ற சிங்கத்தின் வாய்க்குள் தானாக இரை போய் சிக்கிக் கொள்வதைப் போல விருப்பப்பட்டே இலவசம் என்ற வலையில் வீழ்ந்து விடுகிறார்கள். கலியுகத்தில் இது உக்கிரமடைந்து வருகிறது. மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக இலவச வலை விரிக்கப்படுகிறது. இதில் வாக்காளர்கள் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். இதில் குறுகிய கால ஆதாயம் அடைபவர்கள் வாக்காளர்கள், நெடுங்கால கொள்ளையடிப்பவர்கள், இதன் மூலம் பதவிக்கு வந்தவர்கள் அரசியல்வாதிகள்.

அரசியலில் ஏற்றம் பெற பல்வேறு வழிமுறைகள் உள்ளன. பண்டைக் காலத்தில் சனாதன தர்மம் வழிகாட்டு நெறியாக இருந்து வந்தது. ஆட்சியாளர்கள், மக்களை தங்களது குழந்தைகளாக பாவித்து செயல்பட்டார்கள். தர்மமும், கர்மமும் பிறழாமல் இருந்தன. தேசத்தின் நிலப்பரப்பு பாதுகாப்பாக இருந்தது. இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களும் அமைதியாக ஆனந்தமாக செழிப்பாக வாழ்ந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை அமலாக்கினார்கள். இது அவர்களுக்கு கைவந்த கலை. இப்போது கையை தேர்தல் சின்னமாக வைத்துள்ள காங்கிரஸ்காரர்களும் பிரிட்டிஷாரின் எடுபிடிகளாக செயல்பட்டார்கள் என்பதுதான் உண்மையான வரலாற்றுப் பதிவாகும்.

எல்லா காலங்களிலுமே சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் இருப்பது வழக்கம். இப்போது சமூக ஊடகங்களில் ஈர்ப்புமிக்க கருத்துகளை பதிவு செய்பவர்கள் பிரபலங்களாக உள்ளனர். அரசியல்வாதிகள், இப்படிப்பட்ட பிரபலங்களையும் தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொள்ள தவறுவதில்லை.

இலவசம் கொடுக்க எங்கிருந்து பணம் வருகிறது? மக்கள் பணத்தைத்தான் இலவசம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் அளிக்கிறார்கள். இதனால் வளர்ச்சித் திட்டங்கள் ஸ்தம்பித்து விடுகின்றன. உதாரணமாக வெனிசுலாவை எடுத்துக் கொள்வோம். எண்ணெய் வளத்தால் இந்த நாடு கொழித்தது.

ஆனால் இப்போது இந்த நாட்டின் நிலைமை எப்படி இருக்கிறது? இங்கு 190 சதவீத பணவீக்கம் காணப்படுகிறது. விலைவாசி விண்ணை நோக்கிப் பறக்கிறது. 90 சதவீத மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். இதில் ஏறத்தாழ சரிபாதி மக்கள் கடும் வறுமையில் உழல்கிறார்கள். இதற்கெல்லாம் மூலகாரணம் என்ன? உயர்மட்டத்தில் நடைபெற்ற ஊழல், மக்களை வசியப்படுத்துவதற்காக வாரி இறைக்கப்பட்ட இலவசங்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரதத்திலும் இத்தகைய நிலவரம் சில மாநிலங்களில் காணப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவிலும், ஹிமாச்சல் பிரதேசத்திலும் இது உச்சம் பெற்றுள்ளது. கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்றபோது பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்தது. நிதி பற்றாக்குறை, அனுமதிக்கப்பட்ட 3 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. அது 2.6 சதவீதம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தேர்தலின்போது காங்கிரஸ் வாக்குறுதிகளை வாரி வழங்கியது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை, எல்லா வீடுகளுக்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம், படித்து வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, பட்டயதாரிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி, மாதந்தோறும் இலவசமாக 10 கிலோ அரிசி, இந்த வாக்குறுதிகளால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து விட்டது. இந்த இலவசங்களை வழங்க ஆண்டுக்கு ரூ.65,082 கோடி தேவைப்படுகிறது.

மாநில அரசின் பட்ஜெட்டில் இதற்காக 20 சதவீத நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது. எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது கர்நாடக அரசு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. எனவே தொகுதி வளர்ச்சி நிதியை கேட்காதீர்கள் என எம்.எல்.ஏக்களை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தெற்கே கர்நாடகா மோசமான முன்னுதாரணமாக திகழ்வதைப் போல, வடக்கே ஹிமாச்சல் பிரதேசம் மோசமான முன்னுதாரணமாக திகழ்கிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது, பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்தது. தேர்தலின்போது காங்கிரஸ் வாக்குறுதிகளை வாரி வழங்கியது. வீட்டுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.1,500 நிதியுதவி, பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்கம் போன்றவற்றால் ஹிமாச்சல் பிரதேச நிதிநிலை சீர்குலைந்தது.

மாநில உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்தை நிதி பற்றாக்குறை தாண்டக்கூடாது என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது. பாஜக ஆட்சி நடைபெற்றபோது, இது 2.79 சதவீதமாக இருந்தது. கொரோனாவின் போது இது சற்று அதிகரித்து 3.62 சதவீதமானது. கொரோனா தணிந்த பிறகு 2.99 சதவீதமாக சரிந்து விட்டது.

2024ல் காங்கிரஸ் ஆட்சியில் இது 4.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி இது 5.9 சதவீதமாக அதிகரித்து விட்டது.

2018ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ஹிமாச்சல் பிரதேச அரசின் கடன் ரூ.47,906 கோடி. இது 2023ல் ரூ. 76,681 கோடியாக அதிகரித்து விட்டது. இப்போது இந்த கடன் ரூ.90,000 கோடியைத் தாண்டி விட்டது. இதே நிலை தொடர்ந்தால் கடன் விரைவில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டிவிடும் என பொதுநல ஆர்வலர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.

ஹிமாச்சல் பிரதேசம் மலை மாநிலம் என்பதால் மத்திய அரசு தாராளமாக உதவி செய்து வருகிறது. வரும் நிதியாண்டில் ஹிமாச்சல் பிரதேச அரசின் மொத்த செலவு ரூ.52,965 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 56 சதவீத தொகையை அதாவது ரூ.23,412 கோடியை மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்குகிறது.

இலவசங்களை கொடுக்கக்கூடாது என்பதை அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டுமே தவிர உதறித்தள்ளக் கூடாது. மீனை இலவசமாக கொடுப்பதைக் காட்டிலும், மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே நிரந்தர பலனை அளிக்கும் என்பதை உள்ளத்தின் ஆழத்தில் அழுத்தமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்: நிதியியல் வல்லுனர்

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி