கன்னியாகுமரி மாவட்டம், பாலபள்ளம் முத்துமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மஹா சிவராத்திரிக்கு நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கபட்டபோது, தமிழகத்தில் மட்டும் விடுமுறை விடப்படாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். விடுமுறை குறித்து தி.மு.க. அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை. மதுரை ஆதீனம் சங்கபரிவார் இயக்கங்களுக்கு சாமரம் வீசுவதாக நாஞ்சில் சம்பத் சொல்லியதாக கூறுகிறீர்கள். தற்போது அவர் யாருக்கு சாமரம் வீசுகிறார்? அவர் இப்போது எந்த கட்சியில் இருக்கின்றார் என்றே தெரியவில்லை. நான் இறைவன் ஒருவருக்கு மட்டுமே சாமரம் வீசுவேன். தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்கிச் செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர். போப் ஆண்டவர் மற்றும் இஸ்லாமியர்கள் பல்லக்கு தூக்குவது குறித்து அவர் கேள்வி எழுப்புவாரா? ஆன்மிகமும், அரசியலும் ஒன்றுதான். கோயில் அரசாங்கத்தின் கைகளில் உள்ளது. ஏன் சர்ச், பள்ளிவாசலில் அரசு தலையிடுவதில்லை? அரசு கோயிலில் தலையிடுவதால், அரசியலும், ஆன்மிகமும் ஒன்றுதான். தி.மு.க.வினர் ஓவராக சென்றால் பிரதமரை சந்திப்பேன். எனக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர். அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மீகவாதி பேசக்கூடாதா? தற்போது பட்டினப் பிரவேசத்திற்கு எதிர்ப்பு இருக்கும் காரணத்தினால்தான் ஆதரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல்லக்கு சுமக்க நான் மட்டுமல்ல தமிழக மக்களே தயாராக உள்ளனர்’ என்று கூறினார்.