ராமர் கோயில் திறப்பு விழாவில்பங்கேற்றது குறித்து விளக்கம் அளிக்கும்படி அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசிக் ‘ஃபத்வா’ அனுப்பப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று அவர் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றது குறித்து விளக்கம் அளிக்கும்படி இமாம் உமர் அகமதுவுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஃபத்வா அனுப்பப்பட்டது. இது குறித்து இமாம் உமர் அகமது அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனக்கு ஃபத்வா வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 22-ம்தேதி மாலையில் இருந்தே எனக்கு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த சிலரது அழைப்புகளை பதிவு செய்து வைத்துள்ளேன். என்னை நேசிப்பவர்கள், நாட்டையும் நேசிப்பர், எனக்கு ஆதரவும் தெரிவிப்பர்.
ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றதற்காக என்னை வெறுப்பவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும். நான் அன்பை வெளிப்படுத்தியுள்ளேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நான் மன்னிப்பு கேட்கவும் மாட்டேன், இமாம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யவும் மாட்டேன். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை செய்து கொள்ளலாம்.
எனது எண்ணம் அன்பை பரப்புவது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க எடுத்த முடிவு, எனது வாழ்வில் எடுத்த மிகப் பெரிய முடிவு. இது பற்றி 2 நாட்களாக சிந்தித்தேன். பரஸ்பர மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அயோத்தி செல்ல முடிவெடுத்தேன். அயோத்தியில் மத குருக்கள், ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் என்னை உளமாறவரவேற்றனர். எனது எண்ணம் அன்பை பரப்புவதுதான்.
ஆனால், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சென்று திரும்பியபின், என்னை பலர் திட்டுகின்றனர். தற்போது விளக்கம் அளிக்கும்படி ‘ஃபத்வா’ அனுப்பப்பட்டுள்ளது. தலைமை இமாம் ஆக இருக்கும் நான், ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருக்க கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எனக்கும், கடவுளுக்கும் இடையிலான விஷயம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது செயலுக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இவ்வாறு இமாம் உமர் அகமது தெரிவித்துள்ளார்.